பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள்
பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள், இராஜகோபாலன், மணிமேகலைப் பிரசுரம், பக். 256, விலை 135ரூ.
பிரபல தனியார் கம்பெனிகளில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியரின் பொழுதுபோக்கு, புத்தகம் படிப்பதும், சேகரிப்பதும்தான். பல நூல்களைப் படித்து அறிய வேண்டிய கதை வடிவிலான பல்வேறு செய்திகளை இந்த ஒரு நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்நூலில் உள்ள எந்தவொரு குட்டிக்கதையும் இவரது கற்பனையில் உதித்ததல்ல. எல்லாமே உலக அளவில் தோன்றிய பல மகான்கள், மேதைகள், பெரியோர்கள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், சூஃபிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள்… என்று பலரின் சொற்பொழிவுகளிலிருந்தும், அவர்கள் எழுதிய நூல்களிலிருந்தும் தேடி எடுத்து இந்நூலில் தொகுத்துள்ளார்.
அனைத்துமே குட்டிக் கதைகள் என்று கூற முடியாது. இவற்றுள் பல குட்டிக்கதைகள் போன்ற தகவல்களும் பழச்சாறு போன்று மிகச் சுருக்கமாக உள்ளன. எந்தப் பக்கத்தை விரித்தாலும் அதில் 2 அல்லது மூன்று கதைகள் இருக்கும். அவை படிக்க விறுவிறுப்பாகவும், சிந்தனைகளைத் தூண்டுபவையாகவும் இருக்கும்.
இப்படி இந்நூலிலுள்ள சுமார் 250க்கு மேற்பட்ட பக்கங்களில் சுமார் 600-க்கும் குறையாத குட்டிக் கதைகளைப் போன்ற தகவல்கள் உள்ளன. ஒரு ஞானி அரசனைப் பார்த்து உதவி பெறலாம் என்று வரும்போது, அரசனோ கடவுளிடம் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எண்ணற்ற கோரிக்கைகளை வெகுநேரம் வேண்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஞானி, ‘அரசனே ஒரு பெரிய பிச்சைக்காரனாக இருக்கும்போது, நாம் அவரிடம் என்ன பெறமுடியும்’ என்ற விரக்தியுடன் திரும்பி விடுகிறார். இப்படி சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை இந்நூலில் படித்து அறியலாம்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 21/6/2017.