பிரபஞ்ச இரகசியங்கள்
பிரபஞ்ச இரகசியங்கள், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 208, விலை 200ரூ.
அண்டசராசரங்கள் என்று கூறப்படும் சூரியன், சந்திரன், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விண்வெளிக்கற்கள், ஆகாயம், கேலக்ஸி… என்று இயற்கையின் ஒட்டுமொத்த தொகுப்பான பிரபஞ்சத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்.
பிரம்மாண்டமான இப்பூமியே இப்பிரபஞ்சத்தில் ஒரு அணு அளவிலான புள்ளிதான். ஒன்றுமே இல்லாத இந்த வெட்ட வெளியில் சுமார் 1370கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய அணுத்துகளின் பெரு வெடிப்பு (பிக்-பேங்) மூலம்தான், கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
அங்கு இந்த அணுத்துகள் எப்படி தோன்றியது, அதில் இவ்வளவு பெரிய வெடிப்பு எப்படி நிகழ்ந்தது, அது கோடிக்கணக்கான சூரியன்களையும், கோள்களையும் கொண்ட பிரபஞ்சமாக எப்படி பிரிந்தது, இவைகளுக்கு இடையே கணக்கிட முடியாத இடைவெளி எப்படி உருவானது, இவை எப்படி இயங்குகின்றன, இதில் பூமி எப்படி தோன்றியது, அதில் உயிரினங்கள் எப்படி உருவானது, அவை வாழும் சூழல் எப்படி ஏற்பட்டது, மனிதன் எப்படி தோன்றினான், பிறகு கண்டங்கள், பூமியின் கட்டமைப்பு, காலங்கள்… போன்ற பல்வேறு விஷயங்கள் எப்படி உருவாகின என்ற விபரங்கள் எல்லாம் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கலீலியோ, ஐன்ஸ்டீன், நியூட்டன், டார்வின், பென்சியாஸ், வில்சன், எட்வின் ஹபிள், மில்லர், ராபர்ட் ஷப்பைரோ… போன்ற விஞ்ஞானிகளின் ஆய்வுகள் மூலம் இவை குறித்து அறியப்பட்ட பல விளக்கங்களும், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.தவிர, இப்பிரபஞ்சமும் மனிதனும் உருவான விபரங்களை ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் கூறும் கருத்துக்களும் இந்நூலில் சுருக்கமாக உள்ளன.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 28/6/2017