பசும்பொன் கருவூலம்
பசும்பொன் கருவூலம், தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 300, விலை 300ரூ.
நாத்திகம், சுயநலம், பிரிவினை வாதங்களால் தமிழகம் தாழ்ந்து நின்றது. நாசமுற்று தமிழகம் வீழ்ச்சி பெற்றிருந்த நேரத்தில் தேசியமும், தெய்வீகமும் தோற்றுவிடாமல், தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி பெற வைத்தவர் பசும்பொன் முத்துராலிங்கத் தேவர்.
மேடையேறி சங்கநாதம் செய்தார். தியானம், தொண்டுகள் செய்து பக்திமானாகத் திகழ்ந்தார். களத்தில் எதிர் நின்று வீரனாகப் போராடி சிறை புகுந்தார். பத்திரிகைகளில் முரசு முழங்குவது போல் எழுதியவைகளை ஆவணப்படுத்துகிறது இந்த நுால்.
‘கண்ணகி’ இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், கண்ணகி உடைத்துச் சிதறிய மாணிக்கப் பரல்களாக படிப்பவர் மனத்தில் தெறிக்கின்றன. ‘நேதாஜி’ இதழில் உள்ள கட்டுரைகளும், அவரது நேர்காணல்களும், ‘பசும்பொன் கருவூலமாக’ தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழி, சமூகம், அரசியல், ஆன்மிகம் ஆகிய தலைப்புகளில் அவரது சிந்தனைகள் மின்னலென ஒளி வீசுகின்றன. காஷ்மீர் கலவரம், பாகிஸ்தான் பிரிவினை, கொரிய நாட்டு சமரசம், சீனக் கிளர்ச்சி, இஸ்ரேல் போர், பர்மா கலவரம், மூன்றாம் உலக யுத்தம் வருமா? ஆகிய தலைப்புகளில் உலகச் சிந்தனைகள் இங்கே தீர்வை நோக்கிய போராட்டங்களாய் தரப்பட்டுள்ளன.
வ.உ.சி., பரிசுத்த வள்ளல், தியாகி; அவர் மாடு போல் செக்கிழுத்தார். அவர் விடுதலை பெற்றபோது, அவரை வரவேற்கவோ கொண்டாடவோ யாரும் வரவில்லை. இதை அவரும் எதிர்பார்க்கவில்லை (பக். 44). ஆத்திக நாத்திக விளக்கம், மனிதரில் மகான்கள் நேதாஜி பற்றிய உண்மைகள். தேசிய சக்தி, மாசேதுங், ஸ்டாலின் தலைவர்கள், காஷ்மீரில் நேருவின் தடுமாற்றம் இப்படி பல எழுத்தோவியங்கள், ‘பசும்பொன்’ பார்வையை வழங்கி, உலக நடப்பை நமக்கு உணர்த்துகின்றன.
நேதாஜி விசாரணைக் கமிட்டிக்கு அவர் தந்த நேர்முகம் மிகவும் அரிய செய்திகளைச் சொல்கின்றன. தேவர் பெருமகனாரின் முழு ஆளுமையை இந்த நுால் நமக்குத் தருகிறது!
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
– முனைவர் மா.கி.ரமணன்
நன்றி: தினமலர், 8/4/2018.