பொலிக பொலிக
பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ.
நெகிழ்க, நெகிழ்க!
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு இது என்பதை ஒட்டி தினமலரில் 108 நாட்கள் தொடர்ந்து எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகி உள்ளது. எந்த விஷயமாக இருந்தாலும் அதைத் தேனில் குழைத்து தருவதில் வல்லவர் பா.ராகவன்.
ராமானுஜர் குறித்த இந்த நூலும் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் படுசுவாரசியமாக அமைந்துள்ளது. ராமானுஜர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுக்கிறார் நாதமுனி. அவரது கரங்களில் ராமானுஜரின் சிலை அதிசயமான முறையில் வழங்கப்படுவதாக சிலிர்ப்பூட்டும் வித்தில் தொடங்கும் இந்நூலில் முழுக்க இதைப்போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் நிறைய.
ராகவன் பல இடங்களில் தன் முழுத்திறனையும் காட்டி நம்மைச் சிலிர்க்க வைக்கிறார். பெரிய நம்பியின் மகள் அத்துழாய்க்கு புகுந்த வீட்டில் சிரமம். தான் அண்ணா என்று அழைக்கிற ராமானுஜரிடம் வந்து முறையிடுகிறாள். ராமானுஜர் சற்றும் யோசிக்காமல் தன் சீடர் முதலியாண்டானை அழைத்து அத்துழாயுடன் சீதன வெள்ளாட்டியாக அவள் வீட்டுக்குச் செல் என்று அனுப்பிவிடுகிறார்.
முதலியாண்டான் போய் அவள் வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு நாளில் முதலியாண்டான் மிகப்பெரிய மேதை என்று தெரிந்துவிடுகிறது. அத்துழாயின் மாமனார் ஓடிவந்து ராமானுஜரின் காலில் விழுந்து முதலியாண்டானை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு கதறுகிறார்… இதுபோல் உருகவைக்கும் நெகிழ்வான காட்சிகள்.
ராமானுஜரை மட்டும் பேசாமல் அவருடன் துணை நின்ற ஒவ்வொரு பாத்திரங்களையும் ரத்தமும் சதையுமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். அங்கங்கே வைணவ தத்துவங்கள், விவாதங்கள், அக்கால அரசியல் அனைத்தும் தலைக்காட்டுகின்றன.
வைணவத் தத்துவங்களை மிகுந்த பக்தி உணர்வுடன் சரணாகதி நிலையுடன் அணுகும் நூலாசிரியர், நம்மையும் அவரது உணர்வு வேகத்துடன் இழுத்துச் செல்கிறார். நூலை வாசித்து முடிக்கும் வரை ஒரு புனிதரின் சன்னதியில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி.
நன்றி: அந்திழை,ஜுலை, 2017.