பொதுவுடைமையரின் வருங்காலம்?
பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ.
மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது!
இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது.
‘பொதுவுடைமை’ என்ற சொல்லில் இருந்தே விமர்சனம் தொடங்குகிறது. ‘உடைமைக்கு எதிரானது கம்யூனிஸம். எனவே, பொதுவுடைமை என்ற சொல்லே பொருந்தாது’ என்கிறார் தா. பாண்டியன். ‘இந்தியாவில் மார்க்ஸியத்தின் உட்கூறுகளை, அதன் மையக் கருத்தைப் புரிந்துகொண்டோர் பலர் இருந்தனர்.
இந்திய சமுதாயத்தில் நான்காயிரம் ஆண்டுகளாக வேரூன்றி, ரத்த நாளங்களில் ஓடும் ரத்தமாக மாறிவிட்ட படிமுறைச் சமுதாய அமைப்புக் கொடுமைகளை அவர்களால் உணர முடியவில்லை. இன்னொரு வகை தியாகச்சீலர்களுக்கு, தூய சிந்தனையாளர்களுக்கு இந்திய சமுதாயக் கொடுமைகள் புரிந்திருந்தன. ஆனால், அவற்றை முற்றாக அழித்தொழிக்க வந்த மாமருந்தான மார்க்ஸிய சிந்தனையை அவர்களால் ஏற்க முடியவில்லை. இவை இரண்டிலும் புலமை பெற்று இருந்த சிலரை, இடது சாரி இயக்கம் புறக்கணித்து ஓரங்கட்டி வைத்திருந்தது’ என்பது தா. பாண்டியனின் மிக முக்கியமான விமர்சனமாக இருக்கிறது.
முதலாளித்துவம் தன்னை உருமாற்றிக்கொண்டு உயிர்வாழ்கிறது. இடதுசாரித் தலைமை சிந்திக்கவும் செயலை மாற்றவும் மறுப்பதே இன்றைய சரிவுக்கான முக்கியக் காரணம்’ என்பது பகிரங்கக் குற்றச்சாட்டாக இருக்கிறது. ‘மார்க்ஸியத்தை, முதுமையடைந்த தலைவர்கள் சிலர் சாமியாரிஸம் ஆக்கக் கூடாது’ என்கிறார் தா.பா. யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை
. ‘காங்கிரஸ் தேசிய இயக்கத்துக்குள் இருந்து கம்யூனிஸம் பேச அக்கட்சி அனுமதித்தது. ஆனால், இடதுசாரி இயக்கம், தேசிய இயக்கத்தை விமர்சனம் செய்வதையே தனது வேலையாகக் கொண்டது ஏன்?’ என்பதும் தா.பா. கேட்கும் கேள்வி. ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்குமான நட்பும் பகையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
மாஸ்கோ பாணியிலான கட்சி முறையை ஜெராக்ஸாக இங்கு பயன்படுத்தியதையும் அவர் கண்டிக்கிறார். இது ஏதோ ‘எதிர்புரட்சியாளன் வேலை’ என ஒதுக்காமல், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களது விவாதங்களை ஆராக்கியமாகத் தொடங்கலாம். ‘இனியும் சிந்திக்க மறுப்பதுத் தவறு’ என்கிறது தா.பா. குரல்.
-புத்தகன்.
நன்றி: ஜுனியர் விகடன், 13/8/2017,