ரகசியமான ரகசியங்கள்
ரகசியமான ரகசியங்கள், கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ.
தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற “ரகசியமான ரகசியங்கள்” அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது.
பல ஆளுமைகளைப் பற்றி காலத்தில் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக செல்கிறது.
அந்தந்த காலச்சூழலுக்கே நம்மை அழைத்துச் சென்று அந்த ஆளுமைகளோடு பயணிப்பது போன்ற உணர்வை ஒவ்வோர்அத்தியாயமும் ஏற்படுத்துகிறது. இதுவரை நாம் படித்தவை, கேட்டவற்றைத் தாண்டி ஏராளமான புதிய தகவல்களுடன் வரலாற்றை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெய்ஹிந்த் செண்பகராமன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைகளைப் பற்றி படிக்கும் போது கண்கள் குளமாகின்றன.
கஸ்தூர்பா காந்தி நெஞ்சுருக வைக்கிறார். கணிதமேதை ராமானுஜன், முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ஆகியோர் முட்டி, முளைத்து மேலே வந்தது இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஊற்று. செக்கிழுத்து விட்டு வெளியே வந்த பிறகு 24 ஆண்டுகள் வ.உ.சி.யை இந்த நாடு நடத்திய விதத்தையும், தாழ்த்தப்பட்டோருக்கு தனி தொகுதி வாங்கித் தந்த அம்பேத்கரை சொந்த மக்களே திரும்பத்திரும் தோற்கடித்ததையும் படிக்கும்போது கோபம் கொப்பளிக்கிறது. புத்தகத்தின் பல இடங்கள் அதிர வைக்கின்றன.
அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாதபடிக்கு மனத்தைக் கனக்க வைக்கின்றன. திரிபும், பக்கச்சார்பும் இல்லாமல், சுவாரசியமாகவும், துணிச்சலாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, உண்மையான வரலாற்றினைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புதையல்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818