சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400.

நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார்.

அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப பாரத்தை ஏற்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது.

ஏகாம்பரியின் சித்திரமே இந்நாவலின் விஸ்தீரணத்தை நேர்த்தியாகத் தொடக்கிவைக்கிறது. ஏகாம்பரி போன்ற, கணவனை இழந்து, தனித்து வசிக்கும் பெண்கள் தங்களது மன ஆறுதலுக்கும், தனிமை விரட்டலுக்குமாக ஊரின் பல்வேறு குடும்பங்களில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் சொந்த நிகழ்ச்சிகளாகவே பாவித்து, வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். ஏகாம்பரி போன்றே ஊரில் உள்ள சில ஆண்களும் சிறிய அழைப்பைத் தவிர, வேறெதையும் எதிர்பார்க்காமல் வேலைகளை எடுத்துக்கட்டிக்கொண்டு செய்வது வழக்கம். அவ்வகையில், ஏகாம்பரி போன்ற பெண்களும் ஆண்களும் ஊரில் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பார்கள்.

அநேகமாகக் கடந்த முப்பது ஆண்டுகளில் இத்தகைய வழக்கம் வழக்கொழிந்து போய்விட்டது. அப்போது இருந்த கூட்டுக் குடும்ப முறை மாறி, தனிக் குடும்ப அமைப்பு அதிக அளவில் தோன்றியதும், தங்களது சந்தோஷத்திலும் துக்கத்திலும் வெளிநபரை அனுமதிக்க மறுக்கும் மனோபாவம் பெருகியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாவலின் காலம் 1950-களின் பிற்பகுதி. அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து, தீவிர அரசியலுக்குள் நுழைந்தபோது, தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள், தனிமனித, சமூக, அக, புற நுண் சித்தரிப்புகள் இந்நாவலின் ஊடுபாவாக உள்ளன. கிராமப்புறங்களில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும் அரசியல் ஜனநாயகத்தன்மையின் தொடக்கப் புள்ளியையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் வெண்ணிலா. இக்காலகட்டத்தின் தொடக்கத்திலிருந்துதான் அரசியல் என்பது ஜமீன் பரம்பரைகள், பெருநிலக்கிழார்கள் ஆகியோரின் வசமிருந்து மெல்ல விடுபட்டது.

அண்ணா போன்ற தலைவர்களின் வருகை, படிக்காத பாமரர்கள், வசதியற்றவர்கள், ஏழை எளியோர் போன்றோருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அதுவரை வெளிப்பட வழியில்லாத, மறுக்கப்பட்டிருந்த அவர்களின் குரல் பொதுவெளியில் உரத்து வெளிப்பட திராவிட இயக்கத் தோற்றமும் அதிலிருந்து பிரிந்து அண்ணா அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்த முடிவும், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. இத்தகைய சமூக மாற்றத்துக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்த அம்மையப்பநல்லூர் நடராஜனின் வாழ்வுடன் நாவல் பயணிக்கிறது.

இக்களத்தைக் கதையாகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே அக்காலத்தின் சாதியக் கட்டுமானங்கள், சாமானியர்களின் அரசியல் நிலைப்பாடுகள், மொழிப் பிரயோகங்கள் ஆகியவை குறித்தும் வெண்ணிலா தெளிவான புரிதல் கொண்டிருப்பது தெரிகிறது. கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பாரம்பரியச் சடங்குகளைப் புறக்கணித்தல் என்ற கொள்கையுடன் உருவாகிவந்த திமுகவின் நல்லூர் கிளைச்செயலாளராகக் கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்தெடுக்கும் லட்சியம்; அதே வேளையில், தன்னையும், தன் உழைப்பையும் நம்பியுள்ள குடும்பத்தினரைக் காப்பாற்றும் பொறுப்பு என்று நடராஜனை இரண்டு பரிமாணங்களிலும் வெண்ணிலா சித்தரித்திருக்கிறார்.

குடும்பத்தை இரண்டாவதாகக் கருதி, கட்சியை முதன்மைப்படுத்தி அதைக் கட்டிக்காத்த தொண்டர்கள் உருவான விதத்தை குமாரசாமியின் மெத்தை வீட்டு ஜமாவின் மூலம் வெண்ணிலா விவரித்திருக்கிறார். குமாரசாமியின் மனைவி சரோஜா போன்றவர்களை எல்லாக் கிராமங்களிலும் இன்றும் காணலாம்.

கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த அம்மையப்பநல்லூர் இளைஞர்களின் சித்தரிப்பும், அங்கு நிலவிய சாதிய மனப்பான்மை, அதையும் மீறி அவர்கள் கட்சிக்காகப் பாடுபடுவது ஆகியவை குறித்த சித்தரிப்பும் மிகையின்றியே இருக்கின்றன. தனகோட்டியின் சாவு, கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு டீ கொடுக்கச் சொன்னால், ஓட்டுப் போடப் போனவர்கள், வந்தவர்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டுக் கணக்கெழுதிய வேலாயுதத்துக்குப் பாவுநூல் விற்று பைசல் செய்ய வேண்டிய இடம் எனப் பல சம்பவங்களை மெழுகைப் போலப் பதிவுசெய்திருக்கிறார் வெண்ணிலா. வடிவேல் பெரியப்பா, ராஜூ முதலியார், பலராமன், ருக்கு, ஏகாம்பரி, துளசி, சுபானு எனப் பலதரப்பட்ட மனிதர்கள் நாவல் முழுக்க நிறைந்து காணப்படுகின்றார்கள்.

இந்த நாவலை வாசிக்கும்போது, கைத்தறி நெசவில் பயன்படும் கட்டேரி என்னும் பாவுநூல் எனக்கு நினைவில் வந்தது. இரண்டு வண்ணங்களைத் தாங்கிய ஒரே நூலுக்குக் கட்டேரி என்று பெயர். இதைத் துணியாக நெய்யும்போது இரண்டு வண்ணங்களைத் துணியின்மீது தீற்றியதுபோல இருக்கும். இதுபோல நடராஜனின் வாழ்வில், கறுப்பு-சிவப்பு வண்ணத்தைத் தாங்கிய இயக்கமும், ஆன்மிகத் தேடலுடன் ஊர்ப் பொதுமனிதனாக ஆக அவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் கட்டேரி நூலைப் போல ஒன்றுசேர உள்ளன. அந்த வாழ்நிலத்தின் மண்மணம் நிறைந்த, நன்கு கூழ் தோய்ந்த இழையுடன் கூடிய நெசவாக இந்த நாவலைச் செம்மையாக நெய்து தந்திருக்கிறார் வெண்ணிலா. நாவலின் முக்கியப் பாத்திரங்களின் மன அமைப்புகளையொட்டியே, மொழி சிக்கனமாகவும் நிதானமாகவும் அமைந்திருப்பது வெண்ணிலாவின் மொழி ஆளுமைக்குச் சான்று.

– கண்டராதித்தன்,

நன்றி: தமிழ் இந்து, 4/12/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030933_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *