செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,முனைவர் கோ.எழில் ஆதிரை, ரோகிணி பதிப்பகம், பக். 156, விலை 100ரூ.

தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார்.

இந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து உள்ளார். கைலாசநாதர் கோவிலின் கருவறை, மாடங்கள் மற்றும் அர்த்த மண்டபம் போன்றவற்றில் தனி முத்திரை பதித்தவர் செம்பியன்மாதேவி.

‘செம்பியன்மாதேவி பாணி’ என்று அழைக்கத்தக்க விதத்தில் அவரது கோவில் கலை ஈடுபாட்டை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. ‘நேர்த்தியான கட்டடங்கள் கட்டிய உலகின் பெண்ணரசியருள் பேரரசியான செம்பியன்மாதேவி தலைசிறந்தவர்’ என, மேலைநாட்டு அறிஞர் கே.சி.கார்லே என்பவர் போற்றியுரைத்திருப்பது, செம்பியன் மாதேவியின் சிறப்பை வெளிநாட்டவரும் வியந்து போற்றி இருப்பதைக் காட்டுகிறது.

அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் செம்பியன் மாதேவி காலத்தில் இல்லை (பக். 29) என்று தெரிவித்திருப்பது அரிய தகவல்.

அவரது கல்வெட்டில் காணப்பெறும் அகர செம்பியன் மாதேவி, மோகனூர், இருக்கை, சாட்டியக்குடி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோவில்கள் குறித்த செய்திகள் விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கைலாசநாதர் கோவிலில் சிற்பங்கள் பற்றிய தகவல்களும், அங்குள்ள ஓவியங்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. கோவில் கலைகளைப் பற்றி அறிவதற்குரிய சிறந்த சான்றாகத் திகழ்கிறது இந்நூல்.

– ராம.குருநாதன்

நன்றி: தினமலர், 8/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *