சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன், சி.சதானந்தன், செம்மொழிக் கழகம், முதல் தொகுதி,- பக். 480, விலை ரூ.300; இரண்டாம் தொகுதி- பக். 520, விலை ரூ. 300.

பாமரர்களுக்கும் விளங்குமாறு எளிய முறையில் வாழ்வியல் உண்மைகளைக் கூறியோர் சித்தர்களே. கடவுள் சார்ந்து, மருத்துவம் சார்ந்து, உடல் சார்ந்து, உலகம் சார்ந்து பல தத்துவங்களை சித்தர்கள் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளை ஆய்வு செய்யும்பொருட்டு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட 158 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

சித்தர் இலக்கியங்களில் காணப்படும் சமுதாயப் பார்வை, நிலையாமை கருத்துகள், இனவியல், பகுத்தறிவு சிந்தனைகள், சைவ, வைணவ கருத்துகள், அறிவியல் செய்திகள், மருத்துவக் குறிப்புகள், உடலைக் காத்தல், மொழியியல் முதலிய அனைத்துக் கூறுகளும் கட்டுரைகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

சித்தர்கள் என்று வரையறுக்க முடியாவிட்டாலும், அத்தகைய சிந்தனைப் போக்குடைய அருணகிரிநாதர், வள்ளலார், வள்ளுவர், பாம்பன் சுவாமிகள், பாரதியார் போன்றோரின் கருத்துகளை ஒப்பிட்டும் சில கட்டுரைகள் உள்ளன.

சிவவாக்கியர், திருமூலர், கொங்கணர் போன்று நன்கு அறியப்பட்ட சித்தர்கள் மட்டுமன்றி, கடுவெளி சித்தர், அழுகணி சித்தர், காகபுசுண்டர் போன்று அதிகம் அறியப்படாத சித்தர்களின் பார்வைகளும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையுமே மிகவும் ஆழமாகவும் எழுதப்பட்டிருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. குறிப்பாக “அறிவே தெய்வம்‘’ (அரங்க.இராமலிங்கம்), “சித்தர்களின் கல்வியியல் கோட்பாடு’‘ (பா.நடராசன்), “சித்தர்களின் சக்திகளும் மருத்துவமும்‘’ (சோம.பொன்னுசாமி), “சித்தர்கள் பாட்டில் சிந்தனை எழுச்சியும் மெய்ஞான மலர்ச்சியும்‘’ (ஜெ.ஹாஜாகனி) ஆகிய கட்டுரைகள் கல்வி நிலையப் பாடத்திட்டத்தில் இடம்பெறத்தக்கவை.

எல்லாக் கட்டுரைகளும் சித்தர்களின் சிந்தனை குறித்தே என்பதால் ஓரிரு கட்டுரைகளில் கூறியது கூறல் இடம்பெற்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு சித்தர்களின் வாழ்வையும் வாக்கையும் ஐயமற அறிய இந்நூல்கள் ஓர் எளிய, அரிய கையேடு.

நன்றி:தினமணி. 09/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *