சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ.

கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர்.

நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது.

வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி புரிந்து, 1780ல் அவரை அரியணை ஏற்றி, மருது சகோதரர்கள் தளபதியாகவும், அமைச்சராகவும் பதவியேற்று சிறப்படைந்தனர்.

மேலும், 1796ல் ராணி இறக்கும் வரை, மறவர் சீமைக்கும், ஆங்கிலேயருக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல்களில், மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை முழுமையாக எதிர்த்து போரிட்டனர்; 1801ல் துாக்கிலிடப்பட்டனர்.

திருப்பத்துார் முடிவு ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. மருது பாண்டியர்களை மக்கள் கொண்டாடினர். அதற்கு, கும்மிகளும், அம்மானைகளும் பெரிதும் உதவின. அந்த வகையில் உருவானது தான் சிவகங்கைச் சரித்திரக் கும்மி. இந்த நுால் ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது.

இந்நுால், 84 தலைப்புகளில், 4,332 அடிகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சுட்டப்பட்டுள்ளன. மருது சகோதரர்களுக்கும், ஆங்கிலப் படைக்கும் நடைபெற்ற போர், ஊமைத்துரைக்கு, மருது இருவரும் அடைக்கலம் கொடுத்த சிறப்பு.

போரில் தோற்ற மருது இருவரும் சிறை பிடிக்கப்பட்டு துாக்கிலிடப்படல், கவுரி வல்லவர் சிவகங்கை ஜமீந்தாராக முடிசூட்டப்படுதல் ஆகிய வரலாற்றுச் செய்திகளை இந்த நுால் விரிவாக விளக்குகிறது.

அரசை ஏற்றுக் கொண்ட கவுரி வல்லவனுக்கு அக்கினீசு துரை, மனு நீதி தவறாமல் அவர் அரசாள வேண்டும் என்றும், 75 ஆயிரம் வராகன் கிஸ்தி செலுத்த வேண்டும் என்றும் அக்கினீசு துரை கூறியதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் மேலாண்மை செலுத்திய கொடுமையை அறியலாம் (பக்., 332).

ஆங்கிலேயருக்கும், மனு நீதிக்கும் என்ன தொடர்பு? இது போன்ற எண்ணற்ற தகவல்களுடன், ஒரு விடுதலை போராட்ட வரலாற்றை கும்மிப்பாடல் வழியாக இந்த நுால் விளக்குகிறது.

கும்மிப் பாடல்களும், அதன் விளக்கமும் வாசகர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. எல்லாரும் படித்து மகிழ வேண்டிய நுாலாகும்.

–பேராசிரியர் முனைவர் ரா.நாராயணன்

நன்றி: தினமலர், 4/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *