சொக்கப்பனை
சொக்கப்பனை, கடங்கநேரியான், வலசை பதிப்பகம், விலை 60ரூ.
அறவெழுச்சிக் கவிதைகள்
கவிஞர் கடங்கநேரியானின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் சொக்கப்பனையில் முந்தைய இரண்டு தொகுப்புகளையும் விட கவிமொழியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு கவிதைகளில் படைத்திருப்பதாகச் சொல்லும் இவரது கவிதைகளில் வாழ்நிலத்தின் கூறுகள் நிரம்பிக்கிடக்கின்றன.
மேகாற்றில் வேப்பம்பூ
உதிரும் கிணற்றைக் கொண்டவள் நீ!
அண்டங்காக்கைகள் அறிந்தே அடைகாக்கும்
குயிலின் முட்டைகளை!
மின்னல் கள்ளருந்திச்
சென்ற மொட்டைப்பனை!
இவ்வாறாக தெறிக்கும் வாழிடம் சார்ந்த காட்சிகளின் ஊடே கடங்கநேரியான் தேர்ந்திருக்கும் அரசியலும் ஊற்றெடுக்கிறது. இவை தமிழின் மீமூர்க்க அறவெழுச்சி கவிதைகள் என கவிஞர் செல்மா பிரியதர்ஷன் சொல்வதற்கு இக்கவிதைகளை வாசிப்பவர்கள் பெரும்பாலும் தலையசைக்கக்கூடும்.
நன்றி: அந்திமழை, 2016.