தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ.
மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி.
இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்களை நடத்தும் முறை கட்டாயமாக்கப்பட்டது.
இத்தேர்தல் குறித்த பல்வேறு விபரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள், வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்களின் தகுதிகள், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கான கையேடு, சின்னங்கள் ஒதுக்கும் முறை, தேர்தல் செலவினங்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களின் கடமைகள், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முறை, வாக்குச் சாவடி அமைக்கும் முறைகள், தேர்தல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும், கூடுதலான விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் தேவையான முக்கிய அலுவலகங்களின் தொலைபேசி எண்கள், தேர்தல் குறித்த முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள், தேர்தல் குறித்த கேள்வி – பதில் பகுதி என்று அனைத்து விபரங்களும் இந்நூலில் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரின் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல் இது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 5/7/2017.