தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350.

ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர்.

தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது.

பிறந்த நாட்டுக்குள் அகதிகளாகவும், அடையாளம் தொலைந்து போன அனாதைகளாகவும் வசித்து வரும் ஒரு சிறுபான்மை இனம், தனது சொந்த மண்ணுக்காக நடத்தும் போராட்டங்கள் குறித்தும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

சம்பூர், சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், உருத்திரபுரம் என தமிழர் பகுதிகளாக இருந்த பல ஊர்களின் தற்போதைய நிலை என்ன என்பதையும், பெரும்பாலான இடங்களில் திட்டமிட்டே சிங்களர் குடியேற்றம் நிகழ்த்தப்பட்டதையும் நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

தமிழ் மக்களின் புராதன இடங்களையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் பகுதிகளையும் கூட இலங்கை அரசு இன்னும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அவற்றின் தொன்மங்களைச் சிதைப்பதற்கான வேலைகளை அரங்கேற்றி வரும் உண்மை நம்மை அதிரச் செய்கிறது.

ஈழ விடுதலைப் போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழர்களின் தாய் நிலத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆவணப் பதிவாக விளங்குகிறது இந்நூல்.

நன்றி: தினமணி, 24/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *