தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்
தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள், மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை, தொகுப்பும் பதிப்பும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழில் மு.இரா.பெருமாள் முதலியார், அடையாளம், பக்.520, விலை ரூ.390.
மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் இந்நூல் தென்னிந்திய வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது.இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் பலரின் குறிப்புகளை இப்போது படிக்கிறபோது, வியப்பு ஏற்படுகிறது. சிலநேரங்களில் அதிர்ச்சியும்.
உதாரணமாக, கி.பி.673 இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இட்சிங் அன்றைய கல்விமுறையை இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு இந்தியா வழிவழியாகக் கடைப்பிடிக்கும் முறைகள் இரண்டு. மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்வதன் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வது முதலாம் முறை. நெடுங்கணக்கின் மூலம் கருத்துகளை மனத்தில் ஊன்ற வைப்பது இரண்டாம் முறை 39’. இட்சிங் குறிப்பிடுவது இன்றைய மனப்பாடக் கல்விமுறையை நினைவுபடுத்துகிறது.
‘கி.பி.1293 இல் பாண்டியநாட்டுக்கு வந்த மார்க்கோ போலோ,#39‘ பார் மாகாணம் (பாண்டிய நாடு) முழுவதும் தேடினாலும் தையல்காரன் ஒருவனையும் காண இயலாது. அங்கேயுள்ள மக்கள் அனைவரும் நிர்வாணமாகக் காட்சியளிக்கின்றனர். மரியாதைக்காக ஒரு சிறுதுணியைக் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ‘ஆடவர், மகளிர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவருமே அப்படித்தான்… ஏனைய மக்களைப் போலவே அரசனும் ஆடையின்றித்தான் இருக்கிறான்39’. மார்க்கோ போலோவின் இந்தக் குறிப்பு, நாம் படித்த, பார்த்த வரலாற்று நாவல்களில், திரைப்படங்களில் பலவித ஆடை, ஆபரணங்களுடன் சித்திரிக்கப்பட்ட அரசர்களை நினைவுபடுத்துகிறது.
இதுவரை கூறப்பட்ட தென்னிந்திய வரலாற்றின் உண்மைத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 24/4/2017.