திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை ரூ.200.
தமிழ்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் புதுப்பித்து, புத்துணர்வோடு பயணித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய அளவிலும் எல்லா வடிவத்திலும் எள்முனையளவும் குறையின்றி, எங்கெங்கும் தமிழ்மொழி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதே தனிச்சிறப்பு.
தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் கருத்தரங்குகள், மாநாடுகள், தமிழர் பண்பாட்டுத் திருவிழாக்கள் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் பரவிப் படர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழ் தன் மித வளர்ச்சியான காலங்களைக் கடந்து வந்தபோது, 19ம் நுாற்றாண்டு வாக்கில் பல்வேறு இயக்கங்களால் புத்தெழுச்சியுற்று, முழு வீச்சில் மீட்சி அடைந்து உலகளாவிச் சென்றதில், திராவிட இயக்கங்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழுணர்வாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
திராவிட மொழிக் குடும்பம் தனித்தன்மையானது என்றும், அதன் மூத்த மொழி தமிழ் என்றும், 1816ல் எடுத்துரைத்தவர் லார்டு எல்லீஸ். பின், 1856ல் கால்டுவெல் திராவிட மொழிகளின் நெருக்கத்தையும், தமிழின் தனித்தன்மையையும் குறிப்பிட்டு, திராவிட மொழி பேசும் அனைவரும் ஒரே திராவிட இனத்தவர் எனும் கருத்தியலை முன்வைத்தார். முதலில் கருத்தியலில் துவங்கி, கொள்கையாக உருவெடுத்து, இயக்கமாகிய திராவிடச் சங்கம், கி.பி., 800ல் துவங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
திராவிட இயக்க எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் இடையறாது முனைந்து, அறிவியல், இதழ்கள், ஆட்சிமொழி என அனைத்திலும் வளம் பெற்ற தமிழ்மொழியின் செழுமையைச் சமூகப் பரப்பில் வெளிப்படுத்திய பாங்கை, திராவிடஇயக்கச்சிந்தனையாளரானமு.பி.பாலசுப்பிரமணியன், 12 அத்தியாயங்களில் தந்திருக்கிறார்.சமூக எழுச்சிக்காகவே நாளேடுகளையும், பருவ இதழ்களையும் நடத்திய திராவிட இயக்கம், ஆண்டாண்டு காலமாக தமிழ் வளர்த்த வரலாற்றைத் தொகுத்து வழங்கும் நுால் இது.
பாரதிதாசன், சுரதா, நாஞ்சிலார், கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், புலவர் குழந்தை உட்பட, பலரது தெறித்த கூரிய வரிகளை நுாலில் காண முடிகிறது. தமிழகம் சார்ந்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் நுாலில் படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு.
நன்றி தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818