திருக்கயிலாய தரிசனம்
திருக்கயிலாய தரிசனம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை ரூ.125.
உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது.
இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர் கலைவாணன். இப்பயணக் கட்டுரையை நாம் படிக்கும் போது, நாமும் சென்று வந்த அனுபவம் கிட்டுகிறது.
பயணத்தினுாடே, மலைகளும், அருவிகளும், ஆறுகளும், வானில் ஒளி விடும் விண்மீன்களும், திரண்டு வரும் மேகங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக விரிவதை, கட்டுரையாசிரியர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். மானசரோவர் ஏரியும், அங்கு நிகழும் வியக்கத்தக்க தரிசனமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
கயிலை மலையின் உட்புற வழியில், மேற்காக இருக்கும் இடத்தில், சிவனின் மேற்கு முக தரிசனக் காட்சியைச் சொல்லும்போது, நாமும் அதில் பங்கேற்கும்படியாக அதைக் காட்சிப்படுத்துகிறார். வடக்கு முக தரிசனத்தைச் சொல்லும்போது, அவர் உணர்ச்சிப் பிழம்பாக ஆகிறார். ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவம், நம்மைத் திகைக்க வைக்கிறது.புத்தருக்கான வழிபாடு, திபெத்தியர்களின் வழிபாடு, அங்கு திரியும் யாக் மாடுகள், அதிசயமாகத் திரியும் நாய் என்று ஒன்றையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். முக்திநாத் பயணம், மனக்காமனா தேவி கோவில் தரிசனம் ஆகியவற்றையும் கட்டுரையாசிரியர் சுவைபட விவரிக்கிறார்.
வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், திருக்கயிலாயப் பயணம் மேற்கொள்வோருக்கு அரிய தகவல்களை குறிப்பாக, கிரிவலம், கிரிவலம் வரும் முறை, பயணத்திற்கு ஏற்ற வழிகள், பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், பயணத்திற்கு ஆகும் செலவு முதலியவற்றை ஒன்று விடாமல் எடுத்துரைக்கும் போது, நுாலாசிரியர் ஒரு வழிகாட்டியாகவே ஆகி விடுகிறார்.
இந்நுாலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029454_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818