சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ.

திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி!

Tamil_News_large_1517576_318_219

நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு,
அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர்.

இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும்
அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை
நுாலாக்கி தந்துள்ளார்.

இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு விட்ட இடத்திற்கும், சங்கத்தமிழ் பண்பாடு தொட்ட இடத்திற்குமான இடைவெளியை அறிவார்ந்த முறையில் நிரப்ப முயல்கிறது.

1. சிந்துவெளியின் இன்றைய பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குஜராத்,
மஹாராஷ்டிரா பகுதிகளில் உள்ள இடப் பெயர்களுக்கும் தமிழகத்தில் சங்ககாலம்
தொட்டு இன்றுவரை நீடிக்கும் இடப்பெயர்களுக்குமான ஒப்பாய்வு.

2. சிந்துவெளி பண்பாட்டின் நகர அமைப்பில் கடைப்பிடிக்கப்பட்ட மேல் – -மேற்கு; கீழ் – கிழக்கு என்ற இருமைப் பாகுபாட்டிற்கும் திராவிட மொழியியலின் மேல் – -மேற்கு; கீழ் – கிழக்கு எனும் கருத்தியலுக்கும் உள்ள ஒற்றுமை.

3. சிந்துவெளி முதல் ஆடுகளம் திரைப்படம் வரை தொடரும் சேவற்சண்டை விளையாட்டு மரபு இவை தான், இந்த நுாலின் முக்கிய ஆய்வுப் பொருட்கள். இவை திராவிட தமிழ் பண்பாட்டின் அடையாளங்கள். இவற்றின்
வேர்களை, சிந்துவெளியில் தேடுகிறார் நுாலாசிரியர்.

இடப்பெயர்கள்

சிந்துவெளி மக்கள் பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்து புதிய இடங்களில்
வாழத்தலைப்பட்டபோது தங்களது இடப்பெயர்களை மீள்நினைவாக எடுத்துச் சென்று பயன்படுத்தி உள்ளனர். அந்த வகையில் அவர்கள் இன்றைய தமிழகப் பகுதிகளில் வந்து குடியேறியபோது, புதிய இடங்களுக்கு மீள்நினைவாக சூட்டிய பெயர்களே கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை போன்றவை.

இதற்கு ஆதாரமாக, சிந்துவெளி பண்பாடு மறைந்து, 4,000 ஆண்டுகள் ஆகிவிட்ட
நிலையில் இதே கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை போன்ற ஊர்ப் பெயர்கள் ஓரசைகூட மாறாமல், இன்றும் சிந்துவெளி நாகரிகம் தழைத்திருந்த பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நிலவுவதை நுாலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அவை மட்டுமின்றி ஆமூர், ஆரணி, படூர், செஞ்சி போன்ற ஊர் பெயர்களை பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் காணமுடிகிறது.

திராவிடர்களின் பூர்வீகம் தமிழகம் அல்ல; அது சிந்து சமவெளிதான் என,
இந்த இடப்பெயர் ஆய்வு நிரூபிக்கிறது. சிந்துவெளி எழுத்துக்கள் (வரிவடிவங்கள்)
எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் படித்தறியப்படாத சூழலில், இந்த இடப்பெயர் ஆய்வு, புதுவெளிச்சம் காட்டும் என்பதை வரலாற்று அறிஞர் ஐராவதம் மகாதேவனும் ஒப்புக்கொள்கிறார். சிந்துவெளி வாசகங்களின் (டெக்ஸ்ட்) தொடக்கச் சொற்றொடர் (ஓப்பனிங் பிரேசஸ்) இடப்பெயர்களை
உள்ளடக்கியிருக்கக் கூடும் என, ஐராவதம் மகாதேவன் கூறுவதை சுட்டிக்காட்டும்
நுாலாசிரியர், அம்மக்களின் வழித்தோன்றல்களாக கருதத்தக்க தமிழர்களின் பண்பாட்டு மரபில், இடப்பெயர்கள் இன்று வரை உயிர்ப்போடு உள்ளன என்கிறார்.

தமிழகத்தில் மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் ஊர், பட்டி, மலை, சேரி, காடு, கோட்டை, பாடி, பாக்கம், வாடி, கரை, நேரி, தாங்கல், துறை, கோவில், மணி, பாறை என்பன போன்ற ஊர்ப் பெயர் விகுதிகள் ஒருசொல் இடப்பெயர்களாக, வடமேற்கு பகுதியில் இன்றும் வழங்கப்படுவதை நிரூபிக்கிறார். ஒரு சொல் இடப்பெயர்கள், தொன்மையின் அடையாளம் என்பதை நினைவூட்டுகிறார்.

மேல், கீழ்சிந்துவெளி நகர அமைப்பின் மேற்கு பகுதியில், உயர்ந்த இடத்தில் ஆளும் வர்க்கமாக கருதத்தக்க கோட்டை பகுதியும், கிழக்குப் புறம் அல்லது கீழ் பகுதியில் எளிய மக்களுக்கானதாக கருதப்படும் குடியிருப்புகளும் இருந்துள்ளன. சிந்துவெளியின் நகரங்கள் பெரும்பான்மையானவை இப்படித்தான் அமைந்துள்ளன. இந்த மேல் – மேற்கு; கீழ் – கிழக்கு என்ற இருமை, திராவிட மொழியியலின் திசைச்சொல்லாக்கத்தில் முக்கிய இடம்பெறுகின்றன. இது ஒருவகையில் புவிமைய (டோப்போ சென்ட்ரிக்) அணுகுமுறை.

அதற்கு மாறாக சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்தோ – ஆரிய மொழிகள், முன்னால் இருப்பது, கிழக்கு; பின்னால் இருப்பது மேற்கு. அதாவது முன் – -கிழக்கு; பின் – -மேற்கு எனும் மனித மைய (ஆந்த்ரோபோ சென்ட்ரிக்) அணுகுமுறையை
கையாண்டுள்ளன.

நவீன புவித்தகவல் ஒழுங்கு முறையின் (ஜியோகிராபிகல் இன்பர்மேஷன்ஸ் சிஸ்டம்) உதவியோடும் ‘கூகுள்’ புவி செயலியின் (கூகுள் எர்த்) உதவியோடும் இடம், கடல்மட்ட உயரம் போன்ற விவரங்களை சேகரித்து, இவர் தொகுத்துள்ள தரவுகள் பிரமிப்பானவை.

பின்னிணைப்பு – 2ல், மேல் கொளத்துார், கீழ் கொளத்துார் தொடங்கி, மேல் பாடி, கீழ் பாடி முடிய, 168 இருமை இடப்பெயர்களை, கடல்மட்ட உயரம், அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்களோடு பட்டியலிட்டுள்ளார்.

நுாலாசிரியர் தன் கருதுகோளை மேலும் உறுதிப்படுத்த, திராவிட மக்களின் பண்பாட்டில் தொன்றுதொட்டு மிளிரும் மலைப் பெருமிதத்தையும் ஆய்வுப்
பொருளாகக் கொள்கிறார். திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். கமில்
சுவலபில்கூட, திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்றே குறிப்பிடுகிறார்.

திராவிட பழங்குடியினரின் இனக்குழு பெயர், தொல் மரபுக்கதைகள் போன்றவற்றில், மலைப்பெருமை வெளிப்படையாகவே உள்ளது. சிந்துவெளி நகரங்களில் மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு எனும் இருமையின் தோற்றுவாய் கூட, இந்த மலைப் பெருமிதம்தான் என்கிறார் நுாலாசிரியர். குறிஞ்சி நிலக்கடவுள் முருகன், தமிழர்களின் முழுமுதற்கடவுளாக போற்றப்படுவதை, இந்த பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.

திராவிட மக்களின் மலைப்பெருமிதத்திற்கான வேரை, சிந்துவெளியில்
தேடுகிறார் நுாலாசிரியர். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் மலை, குன்று, கோடு, கோடை, வரை, மோடு போன்ற மலை சார்பு சொற்கள் இடப்பெயர்களாக இன்றும் வழங்கி வருவதை, நுால் அட்டவணை – 6ல் தந்துள்ளார். இத்தகு பெயர்கள்
வடமாநிலங்களிலும் இடப்பெயர்களாக உள்ளதையும் அட்டவணை – 7ல் பட்டியலிடுகிறார்.

சேவற்சண்டை

நுாலின் மிக சுவாரசியமான பகுதி, சேவற்சண்டை மரபு குறித்த ஆராய்ச்சி.
மொகஞ்சதாரோவில் கிடைத்த முத்திரை ஒன்றில், சண்டைச் சேவல்கள் இரண்டு
இடம்பெற்றுள்ளன. சிந்துவெளி நகரங்களில் அக்காலத்தில் மேற்கு நகர் மக்களுக்கும், கிழக்கு நகர் மக்களுக்கும் இடையே, சேவற்சண்டை விளையாட்டு தீவிரமாக நடந்துள்ளது. அம்மரபின் குறியீடே இது என்கிறார் நுாலாசிரியர்.

பண்டைய சோழர்களின் தலைநகரமான உறையூரின் முற்காலப்பெயர் ‘கோழியூர்’. வீரச்சேவல்களை மெச்சி, நகரத்திற்கு பெயரிடும் மரபிற்கும், பழந்தமிழ் தொன்மங்களில் ஆதாரம் உள்ளது என்று கூறும் நுாலாசிரியர், முற்கால சோழர் நாணயம், கோவில் சிற்பங்கள், கல்வெட்டு என ஆதாரங்களை தேடித்தேடித் தொகுத்துள்ளார். இலக்கிய இலக்கண வெளியிலும் இவரது தேடல் பயணித்துள்ளது.

அர்ப்பணிப்பும் உழைப்பும் ஆய்வுக்கான தெளிந்த திசைவழியும் இந்த தேடலில் இவருக்கு வெற்றி தேடித் தந்துள்ளன. இந்த நுால் சிந்துவெளி பண்பாட்டை கட்டியமைத்தவர்கள் திராவிடரே என, அறிவியல் பூர்வமாக ஆதாரங்களுடன் நிறுவ முயன்றுள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த நுாலை வாங்கி வாசிப்பது ஒன்றே, நுாலாசிரியரின் கடும் உழைப்பிற்கு நாம் நடத்தும் உண்மையான பாராட்டு விழாவாக இருக்க முடியும்.

-தேவிகாபுரம் சிவா.

நன்றி: தினமலர், 8/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *