திருவாய்மொழி
திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ.
ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல்,
‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது.
திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய சில பாசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. திருவாய்மொழிப் பாசுரங்களை எப்படி பாராயணம் செய்வது என்ற தகவல்களை பக்க எண்ணுடன் வழங்கியுள்ளது சிறப்புக்குரியது.
இந்த நூல் பதிப்பாக்கம் பெற தென்மாநிலங்கள் முழுக்க உள்ள சான்றோர் பலர் உதவிக்கரம் வழங்கியுள்ளனர். எனவே, விலையில்லா பதிப்பாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பதிப்பாசிரியரின் கடினப் பணி கண்முன்னே தெரிகிறது.
பொதுத் தனியன்கள், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, இராமாநுச நூற்றந்தாதி முதலான பாகங்களும் அடங்கியுள்ளன. பெருமானை வழிபடத் துணை செய்ய ஏற்ற வகையில் பெரிய எழுத்துகளில் அழகுற அச்சிடப்பட்டுள்ளது. திவ்யப் பிரபந்தம் முழுமையும் ஓத, இயலாதோருக்குக் கிடைத்த அரும்பொக்கிஷம். இறையடி சேர வழிகாட்டும் பெருமையுடைய இந்நூல் அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்று.
-முனைவர் இரா. பன்னிருகை வடிவேலன்.
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818