தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ப.ஞானமணி, காவ்யா, விலைரூ.350

தொல்காப்பியத்தில் யாப்பியல் கோட்பாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நுால். ஆய்வில் அசை, சீர் பற்றிய அரிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொல்காப்பியரின், 20 வண்ணங்கள் மற்றும் அவிநயனார் கூறும், 100 வண்ணங்களையும் எடுத்துக் காட்டி விவரித்திருப்பதோடு, பண்டைய இலக்கண ஆசிரியர்களின் ஏற்புடைக் கருத்துகளையும், முரண்களையும், மறுப்புகளையும் முன்வைத்து சங்கப்பாடலில் எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பது சிறப்பு.

வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திர, நலிபு ஆகிய எழுத்தடிப்படை வண்ணங்கள், புறநானுாறு மற்றும் ஐங்குறுநுாறு பாடல்களில் பயின்று வரும் தன்மைகள் விரிவாக தொகுத்து தரப்பட்டுள்ளன. சீரடிப்படையிலான துாங்கல், சொற்சீர் வண்ணங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

எட்டு இயல்களாகப் பிரிக்கப்பட்ட ஆய்வேட்டில் யாப்பிலக்கணத்தின் தனிமரபு, வரைவிலக்கணம், செய்யுள் உறுப்புகள், வண்ணம், சொற்பொருள் விளக்கம், வண்ண வகைகளை விவரித்துத் தக்க இடங்களில் உரையாசிரியர்களின் கருத்து முரண்பாடு, நுாற்பா பாட வேறுபாட்டை விளக்கி இருப்பதோடு, ஐந்து வகையான அடிப்படை வண்ணங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியரின் வரையறைகளை முன்வைத்து, எழுத்து, சீர், அடி, தொடை, ஓசை போன்றவற்றின் அடிப்படையிலான வண்ணங்கள், ஐங்குறுநுாற்றிலும், புறநானுாற்றிலும் விரவி வரும் பாடல்களை எடுத்துக்காட்டி தெளிவாக விளக்கி, இலக்கண உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரின் விளக்கங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. சிறந்த பாவிலக்கணக் கருவூலமாகவும் விளங்குகிறது எனலாம்.

பிற்சேர்க்கையாக ஆய்வுக்கு துணைநின்ற நுால்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் கூறும் வண்ணங்கள் குறித்து இதுவரை சங்க இலக்கியங்களில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த நுால் உருவாக்கத்தில் சிறந்த உழைப்பு இருப்பதை உணர முடிகிறது. இலக்கண ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 7/11/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031418_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *