தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்
தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிப்பேராயம், பக். 384, விலை 200ரூ.
தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களுக்கு விரிவான வகையில் விளக்கமளிக்கிறது. தொல்காப்பியர் தமிழர்தம் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துக் கூறினார். வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறினார்.
பண்டைத் தமிழ் மக்களின் காதல், கற்பு நிலைகள், நாகரிகம், நகர் அமைப்பு, பண்பாடு, ஆட்சி முறை, போர்முறை, கலை நுணுக்கங்கள், ஆன்றோர் பண்பு, கவின் கலைகள், தொழில்கள், வாணிகம் முதலிய பலவற்றை கூறியுள்ளார். அத்தகைய தொல்காப்பியத்துள் இடம் பெற்றுள்ள கலைச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அகர நிரல் வரிசையில் பொருள் விளக்கம் தந்துள்ளார் நூலாசிரியர்.
எடுத்துக்காட்டாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள அகத்தவர், அகத்திணை, ஆர்வம், ஆவிரை, இகல், இசை நிறை, ஒடுமரம், ஒரீஇ, கம்பலை, கயந்தலை, செவியறிஉறூஉ, செவியுறை, தொடி, தொறும், தொன்மை, போத்து, போந்து, விரிச்சி, விரைவு, வெதிர், வெண்டளை என நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இடம்பெற்றுள்ளன.
இக் கலைச்சொற்களுக்கான பொருள் விளக்கத்தில் சொல்லமைவு முறை, சொற்பிரிப்பு, அச்சொல் இடம்பெறும் தொல்காப்பிய நூற்பா, அந்நூற்பாவின் எண், சொல் பிறப்பு எடுத்துக்காட்டு, தேவைப்படும் இடங்களில் சொல் திரிபு, மக்கள் வழக்கு, பாட வேறுபாடு (பாட பேதம்) முதலியவற்றை மிக நுணுக்கமாக ஆய்ந்து தந்துள்ளார் நூலாசிரியர். தமிழாசிரியர்களிடமும், இலக்கணம், இலக்கியம் பயிலும் மாணவர்களிடமும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 20/6/2016.