வலம்
வலம், விநாயக முருகன், உயிர்மெய் பதிப்பகம், பக். 336, விலை 310ரூ.
பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதரஸாபட்டினம் என்ற தற்போதைய சென்னையில் நடைபெற்ற நிகவுகளைப் படம் பிடித்து காட்டுகிறது இந்நாவல். பிரிட்டீஷ் அதிகார வர்க்கத்துடன் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட தவிப்பு, நம்பிக்கைக்கும், துரோகத்துக்கும் இடையே சிக்கி தவித்த சமூகங்களிடையே நடக்கும் முரண்பாடு ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அன்றைய சென்னையை அவ்வளவு தெளிவாக எளிய நடையுடன் சித்தரித்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் மகன்களாக வெங்டாத்ரி சகோதர்கள் என்றழைக்கப்படும் பெரிய வெங்கடாத்ரி மற்றும் சின்ன வெங்கடாத்ரி ஆகியோரின் பூர்வீக பூமியான – அதாவது கூவம் ஆறும், எழுமூர் ஆறும் சந்திக்குமிடத்தில் இருக்கும் நரிமேடு என்ற பகுதியைச் சுற்றியே நாவல் நகர்கிறது.
வேட்டைப் பிரியர்களான ஆங்கிலேயர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விடுதிகள், வேட்டைக்குப் பயன்படுத்திய லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட வேட்டை நாய்கள், உதவிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் என நரிவேட்டை எப்போதுமே களை கட்டியே இருக்கிறது.
இந்நிலையில் ஒரு குப்பத்தில் இரண்டு குழந்தைகள் கண்கள் நோண்டபட்டு, உடலில் குண்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தது. அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? அவர்களைக் கொன்றது யார்? என்பதுதான் நாவலின் உச்ச கட்டம். நரிவேட்டையைச் சுற்றியே செல்வதால் நாவலை வாசிக்கும்போது சிறு தொய்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் இந்த நூலாசிரியரின் முயற்சி வரவேற்கத்தக்கது.
நன்றி: தினமணி, 20/6/2016.