உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி
உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ.
காலத்தின் கருவூலம்
உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். சாமிநாதையரைவிட 35 வயது பெரியவரான ஜி.யு.போப் முதல் 15 வயது இளையவரான பரிதிமாற்கலைஞர் வரை பலர் சாமிநாதையருக்கு எழுதியுள்ளனர். 210 பேர் எழுதிய 700 கடிதங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. சென்ற நூற்றாண்டுப் புலமை நடையில் அமைந்த இவை, கோத்து கோத்து எழுதப்பட்டுள்ளன. படிக்கச் சிரமம்தான். கவனமாக வாசித்தால் இவற்றின் சுவை அலாதி!
இந்த முதல் தொகுதியில் உள்ள கடிதங்கள் எழுதப்பட்ட காலத்தில் (1877-1900) சாமிநாதையருக்கு வயது 22 முதல் 45 வரை. இவ்விடைக்காலத்தில் சீவக சிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பாமாலை (1895), மணிமேகலை (1898) ஆகிய நூல்களைப் பதிப்பித்துக்கொண்டிருந்தார். அதனால், பொதுவான தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தவிர, நூல் பரிசோதனை, பதிப்பு, விற்பனை முதலிய அம்சங்களே கடிதங்களில் மிகுதியும் இடம்பெற்றுள்ளன. பதிப்புத் தொழிலாக மாறாத காலத்தில் ஆசிரியருக்குப் புத்தக விற்பனையைப் பற்றிய கவலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அஞ்சல் துறையும் தொலைத்தொடர்பும் மிக எளிதாகி விட்ட இன்றைய நிலையில்கூட தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை எதிர்காலத்தவர் அறிய கையளிக்கும் வழிவகை அறியாமல் இருக்கின்றனர். மாநில – மத்திய நூலகங்களுக்கு அனுப்பிப் பாதுகாக்கும் முறை பிரித்தானியர் அறிமுகப்படுத்தியிருந்தும் அதைச் செய்யாமல் உள்ளனர். தெரிந்திருந்தும் செய்வதில்லை. ஆனால், சாமிநாதையர் தான் பதிப்பித்த சீவக சிந்தாமணியைப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
சென்ற நூற்றாண்டில் ஊற்றுப் பேனாவாலும், கடுக்காய் மையாலும் எழுதப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று சமயங்களில் பலரால் கையெழுத்தில் பிரதிசெய்யப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான உடையும் நிலையிலுள்ள பிரதிகளைப் பதிப்பிப்பது சாதாரண செயலல்ல. கடிதத்தில் பேசப்படும் உள் செய்தியையெல்லாம் தமது குறிப்புகளால் மேலும் விளங்கவைத்திருக்கிறார் பதிப்பாசிரியர்
ஆ.இரா.வேங்கடாசலபதி. “நமது ஆப்த ரத்நமாகிய சேலம் இராமசாமி முதலியாரவர்களுடைய பிரிவாற்றாமை அனைவர்க்கும் பெரிதாயிருக்கிறது” என்று தண்டலம் பாலசுந்தரம் முதலியார் குறிப்பிட்டிருந்தால், ‘சேலம் இராமசாமி முதலியார் 2 மார்ச் 1892-ல் காலமானார்’ என்று பதிப்பாசிரியர் அடிக்குறிப்பில் குறித்திருப்பார். கடிதம் எழுதியவர், கடிதத்தில் குறிப்பிடப்பெறும் தொடர்புச் செய்தி, காணும் அருஞ்சொல், இடம்பெறும் நபர் ஆகியன குறித்து பல குறிப்புகளைத் தந்துள்ளார் பதிப்பாசிரியர்.
மேலே சொன்ன குறிப்புகளைத் தருவதற்குப் பழம்நூல்களோடும், பழஞ்சமூகத்தோடும் ஆய்வுப் பரிச்சயம் கொண்டவரால் மட்டுமே முடியும். இதற்கெல்லாம் எவ்வளவு உழைப்பும், புலமையும், நண்பர்கள் ஆதரவும், நூல் கிடங்கும், தகவல் இருக்குமிடம் அறிந்துள்ள அனுபவமும் தேவை.
இதையெல்லாம் நன்குணர்ந்த பேராசிரியர்
வா.செ.குழந்தைசாமிதான் இப்பதிப்பாசிரியரை இந்தப் பணிக்கு முன்மொழிந்தார். ஆனால், இவ்வருமைக் குழந்தையைப் பார்க்காமல் அவர் போய்விட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்நூல் அவருக்குக் காணிக்கையாக்கப்பட்டிருப்பது அவ்வருத்தத்தின் அளவைச் சிறிது குறைத்திருக்கிறது.
-பழ.அதியமான், ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’,
‘அறியப்படாத ஆளுமை’ முதலான நூல்களின் ஆசிரியர்.
நன்றி: தி இந்து, 17/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818