உலகக் கவிஞர் தமிழ்ஒளி
உலகக் கவிஞர் தமிழ்ஒளி, மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.160, விலை ரூ.150.
கவிஞர் தமிழ்ஒளியுடன் பழக வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், கவிஞரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும், படைப்புகள் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார்.
1924 -ஆம் ஆண்டு பிறந்த விஜயரங்கம், கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய கல்வே கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய விஜயரங்கம், பாரதிதாசனின் மாணவராகி அவருடைய சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற புனைபெயரை வைத்துக் கொள்கிறார். 1947 – ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த தமிழ்ஒளி, பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் இணைகிறார். அந்த இயக்கத்தில் தொடர்ந்து இயங்காவிட்டாலும், அந்தச் சிந்தனைகளுடன் தனது கவிதைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். “சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதினார். பிற வேலைகள் எதுவும் செய்யாமல், எழுத்துப் பணியை மட்டுமே வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்தார்.
பத்திரிகைகளுக்கு எழுதி அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டு தமிழ்ஒளி வாழ்ந்தாலும், எழுத்தாளன் மனதில் தோன்றும் உணர்ச்சிப் பிரவாகங்களே எழுத்தாக பரிணமிக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். பிறர் கட்டளைக்கிணங்கி அவர் எதையும் எழுதியதில்லை. எப்போதும் லாட்ஜ் அறைகளில் தங்கி, வறுமையுடன் வாழ்ந்தார். அன்றாட வாழ்வின் நெருக்குதல்களுக்கு அடிபணியாமல் வாழ்ந்த ஒரு கவிஞரின் வாழ்க்கையைப் பற்றிய சிறப்பான பதிவு இந்நூல்.
நன்றி: தினமணி, 3/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818