உலகத் திரைப்படம்
உலகத் திரைப்படம், வெ.சுப்ரமணியபாரதி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.225.
“சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, “ஒயிட் பலூன்’ போன்ற ஈரானியத் திரைப்படங்களை எத்தனை முறை பார்த்திருந்தாலும் இந்த நூலில் அப்படங்கள் குறித்துப் படிக்கும்போது, மீண்டும் கண்கள் கசிகின்றனவே, அதுதான் இந்நூலின் மிகப்பெரிய வெற்றி. எடுத்துக் கொண்ட தலைப்புக்கேற்ப உலகத் திரைப்படங்களில் உன்னதமானவற்றையெல்லாம் காட்சிகள், வசனங்களோடு கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர்.
“உலக இலக்கிய’ கர்த்தாக்களின் தரத்திற்கு எந்த விதத்திலும் குறையாத திரை மேதைகளை, அவர்களது ஈடு இணையற்ற படைப்புகள் மூலம், ஆய்வுப் பார்வையோடு இந்நூல் அணுகியிருக்கிறது.
“தி 400 ப்ளோஸ்’ திரைப்படத்தில் மனோதத்துவ நிபுணரின் கேள்விகளுக்கு சிறுவன் அன்த்வான் பதில் சொல்லும் காட்சி உலகத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க காட்சியாகும். பார்வையாளர்களைப் பார்த்தவாறு பரிதாபமாக அவன் தன் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் காட்சியின் மூலம் “பாயின்ட் ஆஃப் வியூ’ என்ற உத்தி, உலகத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டு எல்லாராலும் பின்பற்றப்பட்டது என்பன போன்ற செய்திகளை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. மொழி எளிமையும், நடை இனிமையும் இந்நூலின் பலம். ஊடகவியல் பயிலும் மாணவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.
நன்றி: தினமணி, 27/6/2016.