உள்ளம் படர்ந்த நெறி
உள்ளம் படர்ந்த நெறி, கோவை எழிலன், சந்தியா பதிப்பகம், பக்.200, விலை ரூ.200.
தான் ரசித்துப் படித்த ஓர் இலக்கியக் காட்சியை நண்பர்கள் குழுவில் தினமும்பதிவிட்டதன் பயனாக உருவாகியிருக்கிறது இந்தத்தொகுப்பு. மொத்தம் நூற்று ஐம்பது காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே இலக்கியக் கடலில் கண்டெடுத்த முத்துக்கள் என்றே கூறலாம்.
கம்பராமாயணம், யுத்தகாண்டத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடலுடன் தொடங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வோர் இலக்கியக் காட்சியாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர்.
சீர்காழி திருப்பதியின் வருணனை, இராவணனை நற்பண்புள்ளவனாகக் காட்டும் பாவேந்தரின் பாடல், முழுமதி கிரகண நாளில் நிலா என நினைத்து பெண்ணை விழுங்க வந்த ராகுவின் தடுமாற்றத்தை எடுத்துரைக்கும் சீவக சிந்தாமணிப் பாடல், (பாரத) தாயைப் பேய் எனச் சுட்டிப் பெருமைப்படுத்தும் பாரதியாரின் பாடல், சிவபெருமானின் சிறப்பை எடுத்துரைக்கும் குண்டலகேசி பாடல், கண்ணப்பரின் அன்பை விதந்துரைக்கும் பெரியபுராணப் பாடல், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடலை புதுக் கண்ணோட்டத்தில் பார்த்து, திருவாதவூரருக்காக இரங்கிப் பாடும் வள்ளலாரின் அருட்பா பாடல் என அனைத்தும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்.
மேலும், குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு, ஆழ்வார்கள் பாசுரங்கள், அரிசந்திரபுராணம், மணிமேகலை, நளவெண்பா, தேம்பாவணி, முக்கூடற்பள்ளு, மூவருலா, தனிப்பாடல்கள் முதலிய இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார். ஆணும் பெண்ணும் எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கான ஐந்திணைப் பாடலோடு முடிவதுதான் உள்ளம் படர்ந்த நெறி!
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818