அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்டபிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை 64, பக். 150, விலை 80ரூ.

18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாக்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தை மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் அன்பே யோகம் என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே. இந்த இலக்கியங்களின் ஆசிரியர்களைப் பற்றியும், ஆழ்வார்களின் வரலாறையும், சித்தர்கள் குறித்த தகவல்களையும் ரசிக்கும்விதமாக எழுதியிருப்பதைப் பாராட்டலாம். உதாரணத்திற்கு இந்நூலில், என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல் கனலி பெரிய வறுப்பினும் அன்போடு உருகி அகழ் குழைவார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே என்ற திருமூலரின் பாடலின் மூலம் அன்பே சிவம் என்பதை எளிய நடையில் விளக்கியுள்ளார். வாசி என்ற மூச்சினை அடக்கி யோக சித்தியால் உடலில் உள்ள மூலாதாரம் நாபி, இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலை, உச்சி என்ற ஆறு இடங்களில் மனதை நிலை நிறுத்தி குண்டலினியை எழுப்பி மேலேறச் செய்து சித்தி பெற்றவரே சித்தர் போன்ற அரிய, பயனுள்ள தகவல்களை இந்நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினமணி, 24/6/13.  

—-

 

சமகால இந்தியச் சிறுகதைகள், மெஹர் ப.யூ.அய்யூப், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 235ரூ.

வேறுபட்ட ஆசிரியர்களால் படைக்கப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பு நூல். பல்வேறு இந்திய மொழிகளுக்குமான சாகித்திய அகாதெமியின் தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ள இச்சிறுகதைகள், எளிமைக்கும், ஆரவாரத்துக்கும் பழமைக்கும் புதுமைக்கும் ஆன சமுதாயக் கலாச்சாரப் பொதுமைப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இச்சிறுகதைகளில் மாறிவரும் சமூகத்தில் பெண்களின் இக்கட்டான நிலைபற்றிப் பேசப்படுகிறது. சமூகத்தின் கட்டமைப்பையே அரித்துக்கொண்டிருக்கும் லஞ்ச ஊழலின் பல்வேறு முகங்கள் படம் பிடித்து காட்டுகின்றன. கிராம வாழ்வின் போக்குக்குள், கூட்டுகுடும்பப் பிரச்சினைகள் பற்றி வியக்கத்தக்க வகையில் கருத்தமைவுகளும் கரிசனங்களும் விரிந்து பரந்து காணப்படுகின்றன. இதைப் படிக்கும்போது வேறு வேறு இந்திய மொழிகளின் இலக்கியச் செழுமை, கடவுள் தந்தை கொடை என்று கொண்டாடவே தோன்றுகிறது. ஷாந்தி நாத் கே. தேசாய் ஆங்கிலத்தில் தொகுத்ததை, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் மெஹர் ப.யூ.அய்யூப். நன்றி: தினத்தந்தி, 5/6/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *