இலக்கண விளக்கம்
இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ.
இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் ஒன்றையொன்று எவ்வகையில் தொடர்கின்றன என விளக்கும் புணரியலும், அகப்பொருள், புறப்பொருள்களை விளக்கும் பொருளியலும், பாடல்கள் எழுதுவதன் இலக்கணம் கூறும் யாப்பியலும் இந்த ஆறு நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. புணரியலில் ‘நாள்கள்’ என்ற சொல்லே சரி என்பதை, ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாக விளக்குவதும் (பக். 222), பொருளியலில், ‘அம்பல், அலர்’ என்ற இரு சொற்களுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குவதும் (பக். 140), அணியியலில், பிற அணிகளை விளக்குவதும் (பக். 202), நூலாசிரியரின் புலமைக்குச் சான்றுகள். ‘கலாநிலையம்’ சேஷாசல ஐயரை, நூலாசிரியர், தன் முன்னுரையில் குறிப்பிடுவது, அவரின் குருபக்தியைக் காட்டுகிறது. தமிழ் இலக்கண ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 31/1/2016.