உச்சிமுகர்
உச்சிமுகர், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள், விழியன், புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு, பாரதி புத்தகாலயம், சென்னை.
குழந்தைகளுக்காக கதைகள் எழுதிவரும் விழியன் தன் குட்டி மகளுடன் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருப்பதே உச்சி முகர் என்ற இந்நூல். குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை எழுத்தின் மூலம் அவர் வாழ்ந்து பார்க்கிறார். இதை வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் குழந்தைகளுடனான மெல்லிய தருணங்களை நினைவுகூர்வார்கள் என்பதே இதன் வெற்றி. தந்தை விழியனுக்கும் குழந்தை குழலிக்கும் இடையிலான தருணங்கள்தான் எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. குழலி ஏன் ட்ரெயின் நிக்குது? அது வேகமாக ஓடுதுல்ல, அதான் ரெஸ்ட் எடுக்குது. பெரிய மீசை வைத்த குழந்தை ஒன்று, கூரையைப் பார்த்து கைகால் உதைத்தபடி அழுகின்றது என்று விழியன் குழலிக்குக் கதை சொல்கிறார். குழலி சொல்கிறாள் கரப்பான்பூச்சிப்பா அது. குழலிக்கு ஏகப்பட்ட புருடாக்களுடன் விழியன் கதைகளைச் சொல்கிறார். அந்த கதைகள் புருடாக்கள் என்பதையும் அவள் புரிந்துகொண்டு ரசிக்க ஆரம்பிக்கிறாள். அதன் தொடர்ச்சியை மறுநாளும் அவள் சொல்லி விளையாடுகிறாள். எப்போது எந்த நிமிடத்தில் குழந்தைகள் என்ன பதில்சொல்லும் என்பதை யாரும் யோசித்து விடமுடியாது. அப்பாவித்தனமும் அறியாமையும் அவர்களின் மிகப்பெரிய வரம். இவை நீங்குவதற்குள் தன் குழந்தைகளுடனான ஒவ்வொரு நொடியையும் தாயும் தகப்பனும் ரசித்து வாழ்ந்துவிட வேண்டும். நன்றி: அந்திமழை, 5/5/2014.