கடலில் வசிக்கும் பறவை
கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ.
யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது வாசிப்பனுபவத்தில் சந்தித்த குழந்தைகள், இயற்கை உருவகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் நிலா ரசிகனின் கவிதைகளிலும் மீண்டும் சந்திப்பார். தனது கவிதைகளில் சரளமாகச் சின்னஞ்சிறு கதைகளையும், துணுக்குகளையும் உருவாக்கிவிடுகிறார் நிலா. யதார்த்தத்திற்கும் மிகு புனைவுக்கும் இடையில் நிலாரசிகன் ஆடும் சர்க்கஸ் என்றும் இந்தத் தொகுதியைச் சொல்லாம். ஓடி விளையாடுகிறது குழந்தை வீடெங்கும் பாசியென படர்கிறது பேரன்பு பேரன்பின் மீது அழுந்தப் பதிந்திருக்கின்றன மிகப்பெரும் கால்தடங்கள் என்று எழுதுகிறார். நிலா ரசிகனின் கவிதைகள் கவிதை எழுதும் பழக்கத்தில் வழுக்கி வழுக்கித் தடம் பதிக்க முயல்கின்றன. -ஆண்டனி. நன்றி: தி இந்து.