ஊழிக்காலம்
ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி, சென்னை, விலை 270ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-201-0.html பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலிகொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் அயல்மண்ணில் மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி. குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியவர்களையும், ஆடு, மாடுகளையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் படுப்பதும்கூட நிறைவேறாத கனவாகிப் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை, குழிகளுக்கு உள்ளே மழை நீர் நிறைந்து நிற்கும் அவலம். எறிகணைச் சத்தம்கேட்டு அலறியபடி அருகில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அழைத்து தங்களது பங்கருக்குள் இருத்திக்கொள்ளும் நேயம்… இவற்றுக்கிடையில் காதலும் மலர்கிறது. அடுத்த நொடியிலோ அடுத்த நாளிலோ மரணம் காத்திருக்கும் நேரத்தில் இணைகளை மனதார வாழ்த்தி நகரும் கருணை மனங்களும் உண்டு. உயிர்போகும் வேளையிலும் உடைமைப் பற்றையும், உயர் சாதி மனோபாவத்தையும் இழக்க மனமில்லாதோரும் உண்டு. ஆண், பெண் என்று அடையாளம் காண முடியாவண்ணம் உடலைக் கரிக்கட்டைகளாக்கிவிடும் புதுவித எறிகணைகளின் தாக்குதல் தொடர்கிறது. பாதுகாப்புப் பகுதிகளென்றோ மருத்துவமனைகளென்றோ அது பார்ப்பதில்லை. உயிர் வாழும் ஆசையை முந்திக்கொண்டுவிடுகிறது பசி. தலைக்கு மேலாக எறிகணைகள் பறந்து கொண்டிருக்கையிலும் நிவாரணப் பொருட்களுக்கான வரிசை நீண்டு கொண்டே இருக்கிறது. பிள்ளைகளைக் கட்டாயச் சேவையிலிருந்து பாதுகாத்தாக வேண்டும் என்ற பரிதவிப்பும் கூடிக்கொள்கிறது. நிவாரணப் பொருட்களைப் பங்கிட்டு வழங்காமல் இயக்கத்தவர்கள் தங்களுக்குள்ளேயே தாராளமாகப் புழங்கிக்கொள்கிறார்கள். அனுபவப்பட்ட படை வீரர்கள் பொறுப்பாளர்களின் கூட்டில் பணிபுரிய, அனுபவம் இல்லாத சிறுபிள்ளைகளைக் களத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். பொறுப்பாளர்களில் சிலர் மனைவி மக்களுடன் பாதுகாப்பாகவே தங்கியிருக்கிறார்கள். உயிராசையால், மக்கள் யாரைப் பாதுகாவலர்களாகக் கருதினார்களோ அவர்களையே பகைவராய்க் கருதும் நிலை. கூடாரத்தின் அருகே இயக்கத்தவர்கள் ஒதுங்கினால், அவர்களை நோக்கி வரும் விமானங்களால் தாங்களும் தாக்கப்படலாம் என்று அஞ்சி விலகும் நிலை. எறிகுண்டுகளின் இடைவிடாத சத்தத்திற்கு இடையில், சோலாரின் துணை கொண்டு தொலைக்காட்சியும் பார்க்கிறார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதக் காட்சிகள் வந்துபோகின்றன.அந்நிலையில் கேலி பேசி சிரித்திடவும் ஒரு வாய்ப்பு. எறிகணை ஆபத்துக்கிடையிலும் பிறந்த நாளுக்குப் பலகாரம் செய்து பகிர்ந்துகொள்கிறார்கள். பூச்செடிக்கு இடம் விட்டுப் பதுங்குகுழி வெட்டுகிறார்கள். இடம் பெயர்ந்து உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று மதம் மாறுகிறார்கள். ராணுவத்தின் கைகளில் சிக்கினால் ஒருவேளை உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணித் தப்பிக்கையில் சுடப்பட்டுச் சாகிறார்கள். இனி யுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்றானதும் சீருடையைக் களைந்துவிட்டு பங்கருக்குள் கிடக்கும் யாருடைய உடைகளையோ எடுத்து அணிந்து கொண்டு சரணடைய வரிசையில் நிற்கிறார்கள். மொத்தத்தில் வாழ விரும்பிய, வாழ்வோம் என்று நம்பிய மக்களின் கதையை ஊழிக்காலமாக்கியிருக்கிறார் தமிழ்க் கவி. -செல்வ புவியரசன். நன்றி: தி இந்து.