உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ.

ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அங்குள்ள சந்தைக்கு வருகிறான். அரிசி கடத்தலைத் தடுக்கும் இந்த நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று மிகுந்த முனைப்புடன் செயல்படத் துடிக்கிறான். ஆனால் அவன் செல்லும் வழி நெடு மலைசாதி மக்களின் வாழ்க்கையைப் பார்க்கிறான். அவர்களுடைய பசியால் பஞ்சடைந்த அந்தக் கண்களை கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகிறான். ஓர் அதிகாரியின் மன நிலையிலிருந்து மாறி ஒரு நல்ல மனிதனாகத் தன் வழியில் நடக்கத் துவங்குகிறான். இப்படி ஒவ்வொரு கதையும் தனி முத்திரை பதிக்கிறது. நாம் அதிகம் அறிந்திராத ஒடிசா கிராமங்களின் ஊடே கதை நகர்ந்து செல்வது. ஒடிசா மீதான புதிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது. நன்றி; தினத்தந்தி, 22/7/13.  

—-

 

மணிவாசகர் மூலர் மணிமொழிகள், சாமி சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 104, விலை 60ரூ.

மாணிக்கவாசகரின் செந்தமிழைப் பாக்களில் மனதைப் பறிகொடுத்த தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். மெய்ஞானமே இன்ப ஊற்று, பக்தர்களின் மாண்பு, சாவதற்க விரும்பேன், நானே சமர்த்தன் முதலிய 14 தலைப்புகளில் மணிவாசகரின் பாடல்களைக் கொண்டே தான் வைத்த தலைப்புகளுக்கேற்ப கட்டுரையை எழுதியுள்ளார். திருமந்திரத்துக்கு இணையான நூல் எதுவுமே இல்லை என்ற சொல்லிவிடலாம். தமிழர்களின் ஆத்ம ஞானத்திற்க திருமந்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய அருமையான நூலுக்கு இன்னும் சரியான உரை காணப்படவில்லை. திருமூல நாயனாரும், திருமந்திரம் பாடிய திருமூலரும் ஒருவர்தான் என்பது உறுதியானால், திருமந்திரம் கி.பி. 5ஆம் நுற்றாண்டில் தோன்றியதென்பது உண்மையாகலாம். இது உண்மையானால் ஆரியர் தமிழர் வெறுப்பையும், வடமொழி தமிழ்மொழி வெறுப்பையும் வளர்க்கும் வெறியருக்குத் திருமந்திரமே சரியான சவுக்கடியாகும் என்று கூறும் ஆசிரியர் திருமந்திரத்திலே ஆழங்கால்பட்டு திருமந்திரத் தொடர்புடைய 14 கட்டுரைகளைப் படைத்துள்ளார். மணிவாசகரின் மணி மொழிகளையும் திருமூலரின் யோக மொழிகளையும் ஒருசேர தேர்ந்தெடுத்து அளித்துள்ளது நூலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது. நன்றி; தினத்தந்தி, 22/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *