ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும், தொகுப்பும் பதிவும்: பசு. கவுதமன், ரிவோல்ட் பதிப்பகம், கும்பகோணம், விலை 185ரூ.
50 ஆண்டுகளுக்கு முன் அரசியல் வட்டாரத்தில் பிரபலமான மூன்றெழுத்து ஏ.ஜி.கே. அதாவது, ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் அவர் மீதான வழக்கு நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று சொல்லும் அளவுக்கு 1960-70 காலகட்டத்தில் சுமார் 140 வழக்குகள் அவர் மீது இருந்தன. இத்தனை வழக்குகள் இருந்தும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. தலைமறைவு வாழ்க்கையின் போதுகூட அவரை போலீஸ் பிடித்ததாகத் தகவல் இல்லை. தானாகப்போய் சரணடைவார். காவல் துறையின் நம்பிக்கையான கைதி. தப்பித்து ஓடிவிடுவார் என்று போலீஸ் அச்சப்பட்டது இல்லை. உட்கார வைத்துவிட்டு நம்பிக்கையுடன் வீட்டுக்குப் போய்விட்டே வரலாம். ஆனால், தப்பிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் அவரைத் தடுக்க யாராலும் எதுவாலும் முடியாது என்கிறார் புத்தகத்தை வெளியிட்டுள்ள இளங்கோவன். அத்தகைய போராட்ட வாழ்க்கை கொண்டவர் கஸ்தூரிரெங்கன். அன்றைய நாகை தாலுகாவில் 1962 – 75 காலகட்டத்தில் விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள் கடுமையாக நடந்தன. கீழ்வெண்மணி கொடூரம் நடந்ததும் அங்குதான். 1952-களில் பெரியார் தொடங்கிய திராவிட விவசாயிகள் தொழிலாளர் கழகத்தில் கஸ்தூரிரெங்கனின் பங்களிப்பு அடிப்படையானது. நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டாமல் போனால் அவர்கள் உங்களைத் தீண்டுவார்கள் என்று எச்சரிக்கை செய்பவராக பெரியார் இருந்தாலும், அன்றைய கட்சிப் பொறுப்பாளர்கள், நில உடைமையாளர்களான காங்கிரஸ் ஆதரவாளர்களோடு நெருக்கமாக இருந்ததை எதிர்த்து கஸ்தூரிரெங்கன் வெளியேறுகிறார். வன்முறை நடவடிக்கைகளை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளாத பெரியாரும் கஸ்தூரிரெங்கன் போன்றவர்கள் நடவடிக்கையைப் புறக்கணிக்கிறார். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் கீழ்வெண்மணி கொடுமை நடக்கிறது. கூலி உயர்வுக்காகப் போராடினார்கள், உயிரோடு எரிக்கப்பட்டார்கள் என்று சுருக்கமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இரிஞ்சூர் சின்னப்பிள்ளை என்பவரது கொலையில் இருந்து இந்தப் பிரச்னை வெடிப்பதாக கஸ்தூரிரெங்கன் சொல்கிறார். வெண்மணி தியாகிகள் கல்வெட்டில் சின்னப்பிள்ளையின் பெயர் பதிக்கப்படவில்லை என்றாலும், சின்னப்பிள்ளை உழைக்கும் மக்கள் மனங்களில் பதிவாகியிருப்பவர் என்றும் சொல்கிறார். தங்கவேலு, சின்ன நரியங்குடி அம்மாசி ஆகியோர் மரணங்களும் அதிர்ச்சி தருவன. வரலாற்று ஆய்வாளர்கள் பசு. கவுதமன், வெண்மணி குறித்த தன்னுடைய நூலுக்காக கஸ்தூரிரெங்கனைச் சந்திக்க செல்கிறார். அந்த சந்திப்பே இந்தப் புத்தகமாக ஆகி இருக்கிறது. பண்ணை அடிமை முறை, அடக்குமுறைகள், சாதித் தீண்டாமை, கம்யூனிஸ்ட் கட்சி, திவிடர் கழகம், கொள்கைக்கும் அதனை அமல்படுத்தும் கட்சி நிர்வாகிகளுக்குமான முரண்பாடுகள் – ஆகிய பல்வேறு பரிமாணங்களை உணரமுடிகிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 1/7/2015.