காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப்
காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப், செ. திவான், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 316, விலை 200ரூ.
பாட்டும் நானே பாடலை எழுதியது யார்? பொன்னான வாழ்வே மண்ணாகி போமா, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே எனும் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனக்கண் முன் வருபவர் கா. மு. ஷெரீப். அவரை திரைப்பட பாடலாசிரியர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் இக்கால தலைமுறையினருக்கு, அவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர், தமிழியக்கப் போராளி, இதழாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், இலக்கியப் படைப்பாளர், உரை ஆசிரியர், தம் வாழ்வை தாய்நாட்டுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் அர்ப்பணித்தவர் என்பதை வெளிக்கொணரும் வகையிலும், இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட அவர் பெயரை வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது இந்த நூல். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மூலம், 1930களில் அரசியலுக்கு வந்தவர், 1942ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்குகொண்டு, சிறைத்தண்டனை பெற்றார். பின், ம.பொ.சி. தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கழகத்தில் பங்கேற்று, தமிழக எல்லைகளை பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 1954ல் நடந்த நாஞ்சில் மாவட்ட மாநாட்டில், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், பசும்பொன் தேவர், நாஞ்சில் பி.எஸ்.மணி, ம.பொ.சி., ஆகியோர் முன்னிலையில் உணர்ச்சிப் பொங்க பேசினார். வறுமையுற்றபோது, செல்வந்தர் ஒருவர் பெருந்தொகையை நன்கொடையாக கொடுத்தபோது, வாங்க மறுத்ததோடு, 1962ல், அரசு தியாகிக்கான பென்ஷன் கொடுத்தபோதும் ஏற்க மறுத்து, வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர். சிலப்பதிகாரத்திற்கும், சீறாப்புராணத்திற்கும் முழுமையான உரை எழுதியவர். முறையாகப் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கவில்லை. தமிழ் ஞானமுடைய தந்தை மூலம் கல்வியைப் பெற்றார். அவர் கவிஞரும், ஆராய்ச்சியாளரும், வரலாற்றறிஞரும் மட்டுமல்லர். விருத்தப்பா வகைகளை இனம் சுட்டுவதில், இலக்கண புலவரிடையே ஐயப்பாடுகளும், வேறுபாடுகளும் இருந்த காலகட்டத்தில், ஐயமற்றவராய், கலிநிலைத்துறை, அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியம் என, அவ்வவ்வகையின் பெயர் சுட்டி, சீறாப்புராணத்திற்கு உரை கண்டார். சிவலீலா படத்திற்காக, பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை, கவி கா.மு.ஷெரீப் எழுதியிருந்தார். அந்தப் படத்தின் கதை உரையாடலோடு, அப்பாடலையும் எம்.ஏ.வேணு விற்றுவிட்டார். அது, கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக, திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றது (பக். 208) என, நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.இந்த நூல் கா.மு. ஷெரீப்பின் வரலாறாக மட்டுமின்றி, தமிழின வரலாறாகவும், தமிழிலக்கிய வரலாறாகவும் திகழ்கிறது. -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 30/8/2015.