காலம்
காலம், ராஜம் கிருஷ்ணன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். தனது வாழ்வில் கடந்துபோன பல சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவிலிருந்து இறக்கி, மூன்று கட்டுரைகளாக ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார். முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் சம்பவங்கள் வழியாக ஓர் எழுத்தாளரின் வாழ்க்கைச் சித்திரம் இந்நூலில் பதிவாகியுள்ளது. எழுத்துப் பயணத்தின் ஏராளமான அனுபவங்கள் மனதை அழுத்த அவற்றை எல்லாம் முதுமையின் துயரத்தைப் பொருட்படுத்தாது எழுத்தில் இறக்கிவைத்து ஆசுவாசமடைய முயல்கிறார் ராஜம் கிருஷ்ணன். புதிதாய் எழுத வருபவர்கள் படிக்க வேண்டிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்நூல் கவனிக்கத்தக்கது. நன்றி: தி இந்து, 26/7/2014.
—-
கேள்வி பிறந்தது இன்று, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 65ரூ.
இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு தொலைக்காட்சியில் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அளித்த விடைகள். கேள்வி பிறந்தது இன்று என்ற தலைப்பில் தொகுதி 2 ல் வெளிவந்துள்ளது. இஸ்லாம் வாள் முனையில் பரவியதா? பர்தா ஏன்? பலதார மணம் பாவமா? பரிகாரமா? மூன்றே வார்த்தைகளில் மணமுறிவா? பயங்கரவாதத்திற்கு இஸ்லாமியத் தீர்வு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு அழகான, தெளிவான விளக்கங்களை தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/7/2014.