குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே, ப. திருமாவேலன், வெளியீடு விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 80ரூ. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் இலங்கை முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போர் வரையிலான நிகழ்ச்சிகளை தொகுத்து ‘ஈழம் இன்று’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய நூல் ஏற்கனவே வெளிவந்தது. போருக்கு பின்னால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் துயரம், ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 225 அகதிகள் இந்தோனேசியா கடல் எல்லையில் தடுக்கப்பட்ட அவலம். வேலுப்பிள்ளையின் மரணம். சிங்கள மயமாகும் தமிழ் ஈழம் என்பன போன்ற சோக சித்திரங்களை வார்த்தையில் வடித்திருக்கிறார். இதயம் புண்ணாகி வலிக்கிறது. கண்கள் குளமாகி வழிகிறது. இலங்கையில் நடந்த கொடூரம் போர் நெறிகளுக்கு விரோதமானது என்று ஐ.நா.சபையின் அறிக்கையும், ராஜபக்ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் கோஷமும் ஓரளவுக்கு மனதுக்கு ஆறுதலைத் தருகிறது. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-492-9.htmlநியான் நகரம், ஷம்மி, உயிர்மை பதிப்பகம், 11-29இ சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 199ரூ. இது ஒரு வித்தியாசமான முயற்சி. புத்தகத்தின் வடிவமாகட்டும், உள்ளீடு ஆகட்டும் அனைத்திலும் புதுமை மின்னுகிறது. இது ஒரு நாவல். காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. சினிமாவாக எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட நாவல். இதை ஷம்மி எழுதியிருக்கிறார். ‘ஒரு உண்மைக் கதையைத் தழுவி’ என்ற பிரகடனத்தோடு இந்தக்கதை எழுதப்பட்டு உள்ளது. கதையின் இடையிடையே பாடல்கள் இடம் பெறுகின்றன. ஒரு இசைக்கலைஞனை பற்றிய கதை என்பதால் அந்த பாடல்கள் கதையோடு இணைந்து உள்ளன. இந்த பாடல்கள் இசை வடிவத்துடன் சி.டி.யாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சி.டி.யும் புத்தகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. பாராட்டப்பட வேண்டிய புதிய முயற்சி. — சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள், பாகம் -3, இதயவேந்தர் வாசகர் வட்டம், 257, பவுடர்மில்ஸ் ரோடு, காந்திஜி நகர், புளியந்தோப்பு சென்னை 12, விலை 165ரூ. திரை உலகில் ஒரு சகாப்தமாகத் திகந்தவர் சிவாஜிகணேசன். அவருடைய சாதனைகள் கணக்கில் அடங்கா. சிவாஜி ரசிகர்கள் “இதயவேந்தன் வாசகர் வட்டம்” என்ற அமைப்பை நிறுவி, “சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள்” என்ற தலைப்புடன் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்போது 3-வது புத்தகம் வெளிவந்துள்ளது. இதில் சிவாஜியின் வெள்ளி விழாப் படங்கள், அவற்றின் கதை, அந்தப் படங்கள் எங்கெங்கு எத்தனை நாட்கள் ஓடின என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை, படிக்காதமேதை உள்பட 24 படங்கள் பற்றிய முழு விவரங்களும் இருப்பதால். சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு ரசிகர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. படங்கள் கண்ணைக் கவருகின்றன. — வன்னிக்காட்டு வாசம், ஜா. அடைக்கல ராசா, வெற்றிமொழி வெளியீட்டகம், 16/37, ஸ்பென்சர் காம் பவுண்ட், பேருந்துநிலையம் அருகில், திண்டுக்கல் 624003, விலை 40ரூ. இலங்கையில் தமிழீழ பகுதிகளில் 2003ம் ஆண்டில் சுமார் ஓராண்டு காலம் தங்கியிருந்த அனுபவங்களை ஆசிரியர் ஜா. அடைக்கல ராசா விவரித்துள்ளார். போரினால் சின்னா பின்னமாகி கிடக்கும் தமிழர் பகுதிகளையும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். — சித்தர்களின் ஜீவ சமாதிக் கோயில்கள், மேதூதன் பதிப்பகம், சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 40ரூ. சித்தர்கள் என்பவர்கள் மக்களின் நலன்களையே கருத்தில் கொண்டு வாழ்ந்தவர்கள். மேலும், ஜீவ சமாதி அடைந்தும் மக்களின் பிணியை போக்கி வருபவர்கள். ஆவிகள் உலகம் மாத இதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்ததை நு¡லாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர் நளினா ஸ்ரீராம். பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜீவ சமாதி அடைந்த 16 சித்தர்கள் குறித்த பல்வேறு தகவல்களை சுவாரசியமாக எழுதி உள்ளார் ஆசிரியர். — அறிந்தும் அறியாததும், தொகுத்தவர்- அஜீத் குமார், வெளியீடு ஹயக்ரீவர் பப்ளிகேஷன், இளங்கோவடிகள் தெரு, பெரியார் நகர், பள்ளிக்கரணை, சென்னை, விலை 40ரூ பொது அறிவு களஞ்சியத்தின் தொகுப்புதான் இப்புத்தகம். இதில்இ 1008 பொது அறிவு துணுக்குகள் இடம் பெற்றுஉள்ளன. — அந்திவானம், வான்மதி கல்லைக் கண்ணன், கவுரி பதிப்பகம், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி 606202, விழுப்புரம் மாவட்டம், விலை 70ரூ. புதுக்கவிதைகள் நிறைந்துள்ள தமிழ் இலக்கிய உலகில், மரபுக் கவிதை நு¡ல்கள் அரிதாகவே வருகின்றன. அப்படி வந்துள்ள நு¡ல்களில், வான்மதி கல்லைக் கண்ணன் எழுதியுள்ள “அந்தி வானம்“ சிறந்த கவிதைகளுடன் அருமையாக அமைந்துள்ளது. கவிதைகள் தென்றலாகத் தவிழ்ந்து மனதை மகிழச் செய்துள்ளன. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் என்ற சங்கப் பலகையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்தே, கவிதைகளின் சிறப்பை உணரலாம். — வாருங்கள் வாழ்வின் லட்சியங்களை அடைவோம், மா. பாலமுருகன், மணிமேகலை பிரசுரம், தணிகாசலம் சாலை தி.நகர்., சென்னை 17, விலை 50ரூ. சுய முன்னேற்ற கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக ஆசிரியர் மா. பாலமுருகன் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது. — கபிலர் பாடல்களில் கதைமாந்தர்கள், இரா. திராவிட ராணி, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, விலை 100ரூ. சங்க இலக்கிய புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் கபிலர். கபிலர் தனது பாடல்களில் பெரும்பாலும் பண்டைத்தமிழர்களின் அக வாழ்வை பற்றியே கூறியுள்ளார். கபிலரின் பாடல்களில் நாடகக் கூறுகளாக நாடகவியலார் குறிப்பிடும் கதைக்கரு, கதை அமைவு, காட்சிப் பின்புலம், மெய்ப்பாடுகள், உரையாடல்கள் முதலியவை மிகுதியாக அமைந்துள்ளது. பாரியின் பறம்புமலை, மூவேந்தர்களின் முற்றுகை, பாரியின் சிறப்பு, பாரி மகளிரின் நிலையை விளக்கும் பாங்கு இவற்றின் மூலம் கபிலரின் அகப்பாடல்களில் நாடகக் கூறுகள் மிகுதியாக இருப்பதை காணலாம். நாடகக்கலை குறித்த பல்வேறு செய்திகளை ஆசிரியர் இரா. திராவிட ராணி ஆய்வு செய்து நூலாக வெளியீட்டுள்ளார். — மனம் விட்டுச் சிரிப்போம், சி. எஸ். தேவநாதன், எஸ். எஸ். பப்ளிகேஷன், 8, போலூஸ் குவாட்டர்ஸ் ரோடு, தியாகராஜ நகர், சென்னை 17. விலை 55 ரூ. மன இறுக்கத்தைப் போக்குகின்ற மாமருந்து நகைச்சுவை. பல்வேறு கால கட்டங்களில் பிரபலமானவர்கள் கூறிய நகைச்சுவை நிகழ்வை தொகுத்து ‘மனம் விட்டுச் சிரிப்போம்’ என்ற தலைப்பில் சி.எஸ். தேவநாதன் எழுதியுள்ளார். ஆங்கிலப் படைப்பாளர்களில் பெர்னாட்ஷா, மெலிந்த தோற்றம் கொண்டவர். எச். ஜி.வெல்ஸ்குண்டானவர். ஒருமுறை வெல்ஸ் பெர்னாட்ஷாவைப் பார்த்து “உம்மைப் பார்த்தால் இங்கிலாந்து பஞ்சத்தில் வாடும் நாடு என்று எல்லோரும பரிகாசம் செய்வார்கள்”என்றார். அதற்கு பெர்னாட்ஷா, “சரிதான். உம்மைப் பார்த்தாலே அந்தப் பஞ்சம் வந்ததிற்கான காரணம் புரிந்துவிடும்” என்று பதிலடி கொடுத்தார். இதுபோன்ற எண்ணற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள். — இயேசு நாதர் வாழ்க்கை வரலாறு, அ.லெ. நடராஜன், கிடைக்கும் இடம்- பாரி நிலையம், 184, பிராட்வே ‘ செனை 108, விலை 120ரூ. இயேசு தனது தாய் கன்னிமரியாளிடத்தில் பிறந்த அதிசயமும், இயேசு ஞானஸ்நானம் பெற்று தனது வாலிப வயதில்செய்த போதனைகளும் அற்புதங்களும் அடங்கிய புத்தகம் இது. இயேசு தன்னுடைய ஊழியத்திற்கு 12 சீடர்களை தேர்வு செய்தார். அதில் யூதாஸ் என்பவன் பணத்துக்காக இயேசுவை காட்டிக்கொடுத்தான். இயேசுவை சிலுவையில் அறைந்த அடக்கம் செய்யப்பட்டது பற்றியும், மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தது பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர் அ.லெ. நடராஜன். கிறிஸ்தவர் அல்லாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளலாம். — குருவிக்கூடு, புலேந்திரன், ராஜ பார்க்கவி பதிப்பகம், ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், மன்னார்குடி வட்டம், திருவாரூர், விலை 80ரூ. 128 சிறுவர் பாடல்களின் தொகுகேதான் இந்த புத்தகம். தலையாட்டும் பொம்மை, குயில்கள், பூனையும் சுண்டெலியும், சுற்றுலா போகலாம் போன்ற தலைப்புகளில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடல்களை எழுதி உள்ளார் ஆசிரியர் புலேந்திரன். — இயற்கையோடு இணைந்தது இந்துமதம், சாமிநாத சித்தர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தம் நூற்பதிப்பு கழகம், 154, டி.டி.கே சாலை, சென்னை 18, விலை 80ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை சித்தரிக்கும் புத்தகம் இது. இதை சாமிநாத சித்தர் எழுதி இருக்கிறார். இந்து மதத்தில் உள்ள சுதந்திரம்தான் மிகப்பெரிய சிறப்பு என்று கட்டிக்காட்டப்படுகிறது. மற்ற மதங்களுடன் இந்து மதத்தை ஓப்பீடு செய்கிறார். இந்து மதம் பற்றி தனக்கு என்ன என்ன தெரியுமோ அவற்றை எல்லாம் தொகுப்பாக இது விளக்குகிறது. — உரசும் தீக்குச்சிகள், மழுவை புரட்சி தாசன், வெளிச்சம் பதிப்பகம், மழுவங்கரணை கிராமம், பொலம்பாக்கம் அஞ்சல், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம், விலை 50ரூ. “கூடுகட்டி வாழ ஆசைதான். இங்கு மரங்களும் இல்லை, மரத்தை வளர்ப்பதற்கு மனிதர்களும் இல்லை… நான் எங்கே செல்ல” என்று குருவி கேட்பதன் மூலம் மனிதர்கள் காடுகள் அழித்து வருவதை ஆசிரியர் மழுவை புரட்சி நாதன் படம் பிடித்து காட்டுகிறார். — சித்திரம் பேசுதடி, லட்சுமி ரமணன், வெளியீடு – தேவி பதிப்பகம், அஸ்வத் பிளார் ஏ-9, முத்து தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 80ரூ ஓவியரான வர்ஷாவுக்கு சுதீருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வர்ஷா தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் அது திட்டமிட்ட கொலை என வர்ஷாவின் தங்கை ஆஷா மற்றும் போலீஸ் அதிகாரி விஜய் ஆகியோர் கண்டுபிடிக்கிறார்கள். மேலும் வர்ஷாவை கொலைசெய்தது அவருடை தந்தையின் நெருங்கிய நண்பர் என்று தெரியவர அதிர்ச்சி அடைகிறாள் ஆஷா.வர்ஷாவை அவர் ஏன் கொலை செய்தார் என்பதே கதை. நன்றி: தினத்தந்தி, 12/10/2011

Leave a Reply

Your email address will not be published.