சாமிநாதம்
சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ.
தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் பொருள் புரியாமல் ஆற்றில் விட்டும், தீயில் போட்டும் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில், ஒலைச்சுவடிக்குள்தான் ஓராயிரம் ஆண்டுத் தமிழ் தவமிருக்கிறது என்ற உண்மையை உணரவைத்தவர் உ.வே,சா. அப்படி அவர் பதிப்பித்த சாகா வரம்பெற்ற நூல்களுக்காக தமிழ்தாத்தா எழுதிய முன்னுரைகள் 1200 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம். “ஏறக்குறைய 55 வருஷங்களுக்கு முன்பு சீவகசிந்தாமணியை யான், ஆராய்ந்து வருகையில் திருவாவடுதுறை ஆதின கர்த்தர்களாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணி தேசிகரவர்கள் ஆதினபுத்தகசாலையிலிருந்து அளித்த ஏட்டுப் பிரதிகளுள் மிகப் பழையனவும் பெயரெழுதப் படாதனவுமான மூன்று சுவடிகள் இருந்தன. அவற்றில் முதலுமில்லை; இறுதியுமில்லை; பக்கங்கள் சிதைந்தும் தேய்ந்துபோயும் இருந்தன” என்று புறநானூறு மூலமும் உரையும் நூலை பதிக்கும்போது உ.வே.சா. எழுதி இருக்கிறார். சீவகசிந்தாமணியைப் போலவே அனைத்து ஒலைச்சுவடிகளும் நூற்களும் அவரது பார்வையில் பட்டன. இப்படி ஒரு சுவடி கிடைத்ததும் அந்த நூலைப்பற்றிய செய்திகளை தனியாக தொகுக்கத் தொடங்குவார். அது பற்றிய ஒரு அகராதியையும் தனியாக எழுதி வருவார். அதன் பிறகுதான் பதிப்பு வேலையில் இறங்குவார். கையில் கிடைத்ததை எடுத்து பதிப்பிக்கும் அவசரம் உ.வே.சா-வுக்கு இல்லை. அவரது பதிப்புச் செழுமையை ப. சரவணன் தனது பதிப்புரையில் முழுமையாக விவரித்துள்ளார். முன்பு அருட்பா – மருட்பா மோதலை இலக்கிய, வரலாற்று நோக்கில் விரிவாக எழுதியவர் இவர். “எம் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சி முதலியவற்றாலும் முன்போல் எந்தக் காரியத்தையும் நான் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலவில்லை. ஆயினும் தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் இன்னும் தணியவில்லை. தமிழ்த் தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகிறேன்” என்கிறார் உ.வே.சா. அவரே தமிழ் தெய்வம்தானே? -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 15/3/2015.