தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்), திரட்டித் தொகுத்தவர்: ஏ.கே. செட்டியார், சந்தியா பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை – 600083. விலை ரூ. 180
தமிழில் பயண இலக்கியத்தின் அடையாளமாக இன்று நிலைத்திருக்கும் பெயர், ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஏ.கே. செட்டியார். அவர் எழுதிய புகழ் பெற்ற பயண இலக்கிய நூல்கள், பல நாடுகளைப் பற்றிய அரிதான பழங்கால சித்திரங்களைத் தருபவை. ஏ.கே. செட்டியார் மற்றவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். தமிழகத்திற்குள் பலரும் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய குறிப்புகள், நாம் கடந்து வந்துவிட்ட மிகப்பெரிய பண்பாட்டு வெளியை நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சென்னப்பட்டணத்தின் ஜட்கா வண்டிக்காரர்களின் தந்திரங்களைப் பேசும் கட்டுரையில் அப்படியே இன்றைய ஆட்டோக்காரர்களைப் பார்க்க முடிகிறது. ட்ராம் வண்டிகளைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போது, ஒரு மிகப்பெரிய காலம் நம் முன் கடந்து போகிறது. சென்னை முதல் நீலகிரி வரை பல ஊர்களைப் பற்றிய மனப் பதிவுகள் இந்த நூலை அரிய ஒரு ஆவணமாக்குகிறது. இதே ஊர்களைப் பற்றிய இன்றைய காட்சிகளையும் மனப்பதிவுகளையும் தொகுக்கும் நூல் ஒன்று வரவேண்டும். நன்றி: குங்குமம் 10-12-12