திருக்குர்ஆன்

திருக்குர்ஆன், மூலம் தமிழாக்கம் விரிவுரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, பக். 1227, விலை 350ரூ.

1400 ஆண்டுகளுக்கு முன் மனித சமூதாயம் அனைத்திற்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், எதிரிகள் பலமுறை முயன்றும் இதற்குள் ஒரு மனித வார்த்தையைக்கூட திணிக்க முடியாமல், இன்று வரையும் அதன் புனிதம் பாதுகாக்கப்படுவதுதான். திருக்குர்ஆன், உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே அதன் மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. அத்தகைய திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் அனேகம் வெளியாகியுள்ளன. ஆயினும் இப்பதிப்பகத்தாரின் இந்நூல், குறுகிய காலத்தில் இதுவரை 16 பதிப்புகளைப் பெற்று பிரசித்தி பெற்றுள்ளது. திருக்குர்ஆனில் இறைவன் யார்? அவனுக்குரிய அம்சம் என்னஈ இறைத் தூதர்கள் யார்? அவர்களுக்குரிய பொறுப்புகள் என்ன? மனிதன் எதற்காக படைக்கப்பட்டான், மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களின் சிறப்பு, ஆண்டி முதல் அரசன் வரை அவரவர்களுக்கான பொறுப்புகள், கடமைகள், குற்றச் செயல்கள் மற்றம் பாகப்பிரிவினைக் குறித்த சட்டங்கள், வரம்பு மீறிய செயல்களுக்காக முந்தைய சமுதாயத்தினர் அடைந்த தண்டனைகள், முந்தைய இறை தூதர்கள் சிலரின் வரலாறுகள் கூறும் படிப்பினைகள், இறை நிராகரிப்பாளர்களுக்கு இறக்கப்பட்ட வேதனைகள், பிரபஞ்சத்தின் அமைப்பு, அவை இயங்கும்விதம், இது போன்ற பல அறிவியல் உண்மைகள். இறப்புக்குப் பின் ஆன்மாவின் நிலை, உலக முடிவு நாள் நிகழ்ச்சிகள், சொர்க்கம், நரகம் பற்றிய செய்திகள், மறுமையில் மனிதனின் செயல்பாடுகள் குறித்த விசாரணை மற்றும் தீர்ப்புகள், மறுமையில் மனிதனின் நிரந்தர வாழ்க்கை என்று எண்ணற்ற தகவல்களை இறைவனே எடுத்துரைப்பதுதான் இதன் சிறப்பு. இந்த வேதம் முஹம்மது நபி (ஸல்)  அவர்களுக்கு எப்படி அருளப்பட்டது. இந்த வேத வசனங்கள் எப்படி தொகுக்கப்பட்டது? ஒவ்வொரு வசனமும் எங்கே, எப்போது, எந்தச் சூழலில் இறங்கியது என்று பல விவரங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுளள்ன. உறுதியான பைண்டிங்குடன் 1225 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூல், மாற்று மதத்தவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து சகாய விலையில் தரப்படும் என்பதும் பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 6/8/2014.  

—-

ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி, ஏ.கே.எஸ். புக்ஸ்வேர்ல்ட், சென்னை, விலை 140ரூ.

இருமொழி சொல் அகராதி என்ற தலைப்புடன் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்கள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மிக பயனுள்ள புத்தகம். விலை 240ரூ. ஆங்கிலத்தில் பேச எளிய வழிகளைக் கூறும் ஸ்போக்கன் இங்கிலீஷ் என்ற நூலையும் இதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் கே.பட்டாபிராமன், விலை 100ர. ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் முறையை மாதிரி கடிதங்களுடன் ரங்கநாதன் விளக்குகிறார். விலை 140ரூ. நன்றி: தினத்தந்தி, 30/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *