நான் நடிகன் ஆன கதை
நான் நடிகன் ஆன கதை, சார்லி சாப்ளின், தமிழில் சுரா, வ.உ.சி. பதிப்பகம்.
மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் முன்னுக்கு வரமுடியும் என்பதற்கு சார்லி சாப்ளின் வாழ்க்கை ஒரு உதாரணம். படம் மூலம் அவர் பலரை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்க்கையில் மிக பெரிய சோகம் இருந்துள்ளது. ஒவ்வொரு நாளும், பசி, பட்டினியோடு வாழ்ந்த சார்லி சாப்ளின், அதை எப்படி எதிர்கொண்டு உலகம் போற்றக்கூடிய கலைமேதையாக ஆனார் என்பதை அவரே விவரிக்கும் புத்தகம் இது. சார்லி சாப்ளின் வாழ்க்கை, முன்னுக்கு வர துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம். இந்த நூல், ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 24/8/2014.
—-
இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள், வங்கமொழியில் கமலா தாஸ் குப்தா, சு. கிருஷ்ணமூர்த்தி, அலைகள் வெளியீட்டகம், பக். 164, விலை 100ரூ.
வங்காளத்தின் புரட்சி இயக்கத்தில், ஒரு தூணாக நின்று செயல்பட்டவர் இந்த நூலாசிரியை. ஜுகாந்தர் என்ற புரட்சிக் குழுவில் சேர்ந்த இவர், வெளி உலகிற்கு, ஒரு மகளிர் தங்கும் விடுதியின் மேலாளர் பணிபுரிந்தபடியே, புரட்சியாளர்களின் போராட்டத்திற்கு மறைமுகமாக உதவியவர். 1932ம் ஆண்டு, பிப். 6ம் தேதி, கோல்கட்டா பல்கலைக்கழக செனட் அரங்கில், கவர்னரைச் சுட்ட வீணாதாசுக்கு துப்பாக்கி தந்து உதவியவர் இவர்தான். பலமுறை, அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டவர். விடுதலை பெற்ற பின், புரட்சிக்குழுவின் முடிவுப்படி, காங்கிரசில் சேர்ந்து பணியாற்றியவர். இவர் ஒரு இலக்கியவாதியும்கூட. மந்திரா என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார். இந்த நூல் இவரின் சுயசரிதை என்றுகூட சொல்லலாம். தான் நேரடியாகத் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளுடன், வீணாதாஸ் போன்ற பல பெண் போராளிகளின் பங்களிப்பையும் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியை. மிக அருமையான மொழிபெயர்ப்பு. -சிவா. நன்றி: தினமலர், 24/8/2014.