தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ.
தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 வகையான தாவரங்களை, தாவரப்பெயர்களை மட்டுமே குறிப்பவை, போர்முறைகளை மட்டுமே குறிப்பவை, வழிபாட்டு முறை, கூத்துமுறை, ஓவிய முறை, மருத்துவப் பண்பு, போருக்குப் பிந்தைய விளைவுகளைக் குறிப்பவை எனத் தனித்தனியே வகைப்படுத்தியிருப்பது நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. தொல்காப்பியர் சுட்டும் தாவரங்களின் பெயர்கள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, பெரும்பாணாற்றுப்படை முதலிய இலக்கியங்களில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பதை அந்தந்தப் பாடல்கள் மற்றும் அவற்றின் எண்களுடன் தந்திருக்கும் விதம் அருமை. வண்ணப்படங்களுடன் தாவரங்களை வகைப்படுத்தி இருப்பதுடன் அவற்றின் வகைப்பாடு, தலைமுறை, பிறவி, வளரியல்பு, தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அதன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் எனப் பதிவு செய்திருக்கும் ஆய்வு நூல். தாவரவியல் மாணவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 26/10/2015.