நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ.

தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால கலை என்ற பகுதி வரலாற்று வரைவியலை சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகிய கோணங்களில் எடுத்துரைக்கிறது. வடிவ கோட்பாடுகள், உள்ளடக்க கோட்பாடுகள், அவ்விரண்டும் இணைந்த பொது கோட்பாடுகள், கலை கோட்பாட்டுக்கான பின்புலங்கள் ஆகிய பொருண்மைகளில் வரும் தகவல்களும், பிற செய்திகளும்,நூலை சிறப்புக்கு உரியதாய் ஆக்குகின்றன. நாட்டுப்புறக்கூறுகள், விரிவான பார்வையில் இடம் பெற்றுள்ளன. நாயக்கர் கால இலக்கியங்களில், பாலியல் வருணனைகள் மிக விரிவாக இடம் பெற்றுள்ளமையை காண முடிகிறது என்று கூறியிருப்பது, நோக்கத்தக்கது. இலக்கியங்களில் மட்டுமின்றி, அவர்கள் காலத்திய சுதை, கல் சிற்பங்களிலும், ஓவியங்களிலும்கூட, இத்தகைய போக்கு இருந்துள்ளது. கோவில் சிற்பங்கள் இலக்கியங்களுக்கு உரிய பாடுபொருளாவதற்கும், இலக்கியத்தில் வரும் புறவருணிப்புகள், சிற்பங்களாக படைக்கப்பட்டிருப்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. கலையின் விரிவாக்க பகுதி, சிற்பங்களில் காணப்படும் கலை பாணி, மிதுன பண்பு, போர் பண்புகள் முதலியவற்றை, நூலாசிரியர் நுண்ணிய பார்வையில் புலப்படுத்தி உள்ளார். அரிய புகைப்படங்கள், நூலுக்கு அணிசெய்கின்றன. -இராம. குருநாதன். நன்றி: தினமலர், 6/7/2014.  

—-

 

அருட்தந்தை விக்டர், வ. தாமஸ், ஜான்சி பப்ளிகேஷன்ஸ், புன்னைநகர், நாகர்கோவில், விலை 100ரூ.

அருட்பணி விக்டரின் வரலாற்றினை உரைநடையாக தந்ததோடு, நாடக வடிவமாக 2ம் பகுதியில் தந்திருப்பது நூலுக்கான தனிச்சிறப்பாகும். வரலாற்று உணர்வையும், உண்மை வரலாற்றுக்கான தேடலையும் வாசிப்போரிடம் ஏற்படுத்துகிறது. நன்றி: தினமணி, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *