பழமை ஆனாலும் புதுமை
பழமை ஆனாலும் புதுமை, அலைய்டு பப்ளிஷர்ஸ், 751, அண்ணா சாலை, சென்னை 2, விலை 250ரூ.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியார் பாடினார் அன்று. ஆனால் திருக்குறளின் பெருமையை இங்கிருந்து எட்டுத்திக்கும் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு எழுதிய ஆங்கில நூல்தான் என்சியன்ட் எட் மாடர்ன் (பழமை ஆனாலும் புதுமை). நிர்வாகவியல் கருத்துகள் திருக்குறளில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன? என்பதை யாரும் இதுவரையில் சொல்லியிராத புதுமையான ஆராய்ச்சிகளோடு எழுதியிருக்கிறார். இந்த நூலை அறிவாற்றலை வளர்க்கவும் படிக்கலாம், ஆங்கிலப் புலமையை வளர்க்கவும் படிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 10/10/2012.
—-
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சிவகளிப்பேரலை (சிவானந்த லஹரீ), பத்மன், ஸ்ரீ எம்.பி. பப்ளிஷர்ஸ், சென்னை 4, பக். 144, விலை 60ரூ.
ஆதிசங்கர் அருளிச்செய்த சிவானந்த லஹரீ எனும் வடமொழிப் பாடல்களை (100) தமிழ்க் கவிதைகளாக்கி, அதற்கு விளக்கமும் தந்துள்ளார் நூலாசிரியர். அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் (விடுதலை ஆற்றுப்படை) விளக்கத்துடன் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசக்தி வணக்கம் தொடங்கி சிவபெருமானின் பெருமையையும், சிறப்பையும், மாண்பையும் கூறி நூல் முழுவதும் சிவன் புகழ்பாடும் ஆதிசங்கரரின் 61ஆம் பாடலில் பக்தியின் இலக்கணமாக அங்கோலம் நிஜபீஜஸந்ததி ரயஸ்காந்தோபலம் ஸுசிகா என்ற பாடலுக்கு அழிஞ்சலை விதைகளும் காந்தத்தை ஊசியும், அகத்தோனை நாயகியும், மரத்தினைக் கொடியும், ஆழ்கடலை நதியும் அடைந்திடுமே-நாட்டத்தால். அதுபோல் நின் மலரடிகள் மனம் நிலைத்தல் பக்தியாமே எனத் தமிழ்ச் செய்யுள் வடிவிலும் அதற்கு இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க பக்தியே வித்து. பக்திக்கு ஓர் இலக்கணம் உண்டு. அது எப்படி இருக்க வேண்டும்? அங்கோலம் எனப்படும் அழிஞ்சல் மரத்தினுடைய விதைகள், எவ்வளவு தொலைவு போனாலும் தாய் மரம் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுமாம். காந்தக்கல்லை நேக்கி இரும்பு ஊசி தானாகவே ஈர்க்கப்படுகிறது. தன்னுடைய மனத்தினில் வரித்துக்கொண்ட நாயகனை, நாயகி தேடி இணைகிறாள். மரத்தினைக் கொடி, விருப்பத்துடன் தழுவிக் கொள்கிறது. எங்கோ தோன்றி, எங்கெங்கோ ஓடினாலும் ஆழ்கடலை நதி தேடி அடைகிறது. அது போன்ற ஆவலுடன், ஈர்ப்புடன், ஆர்வத்துடன், காதலுடன் இறைவனாம் சிவபெருமானின் மலர்ப்பாதங்களை மனத்தினுள் நிலைக்கச் செய்வதே சதா நினைத்துக்கொண்டிருப்பதே பக்தியாகும் என்கிறார் ஆதிசங்கரர் என்று பாடலின் விளக்கத்தையும் எளிமையாக்கித் தந்திருக்கும் விதம் அருமை. இந்நூலின் சிறப்புக்கு இந்த ஒரு பாடலே போதுமே. நன்றி: தினமணி, 27/1/2014.