மாவீரன் சிவாஜி

மாவீரன் சிவாஜி, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம்.

மாவீரன் சிவாஜி மதவாதியா? கோவிந்த பன்சாரே மராட்டியத்தில் எழுதிய, சிவாஜி கோன் ஹோட்டா என்ற நூல், செ. நடேசனால், மாவீரன் சிவாஜி என, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நூலை, விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மராட்டியம், இந்தி, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூல், பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. தமிழில், இரு பதிப்புகளைக் கடந்துவிட்டது. சிவாஜி என்ற மன்னன், இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதைக் கட்டிக் காத்தான் என்பதை மட்டுமே பிரசாரமாக செய்கின்றனர். ஆனால், சிவாஜி இந்து மதத்தைப் பின்பற்றி, தெய்வ வழிபாட்டை கொண்டிருந்த போதிலும், மத நல்லிணக்கத்தை பேணிக்காத்தான் என்பதை, வரலாற்று ஆதாரங்களுடன் இந்நூல் கூறுகிறது. சிவாஜியின் படையில், தளபதிகள், வீரர்கள் என 30 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. படையில் உள்ளவர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளை சிவாஜி விதித்திருந்தார். பெண்களை மானபங்கப்படுத்துவது, விவசாயிகளிடம் கொள்ளையடிப்பது போன்றவற்றை செய்யும் படையினருக்கு கடும் தண்டனையையும் விதித்தார். குறிப்பாக, வழிபாட்டுத் தளங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என, நூல் தெரிவிக்கிறது. அழகான முஸ்லிம் இளம்பெண்ணை பிடித்துவந்து, சிவாஜி முன் ஒருநாள் நிறுத்தினார்களாம். வழக்கமாக, அரசர்கள் பெண் இச்சைக்கு ஆளாவது சாதாரணமாக நடந்து வந்த காலத்தில், அந்தப் பெண்ணைப் பார்த்த சிவாஜி, ‘இவர் என் தாயைப்போல் உள்ளார். இவரை எதற்கு இங்கு கொண்டு வந்தீர்கள்’ என படை வீரர்களை கடிந்து, அப்பெண்ணை விடுவித்தாராம். இதுபோல், சிவாஜியின் நற்குணங்களையும், அவரின் மதச்சார்பு இல்லாத தன்மையையும், பல்வேறு வரலாற்று ஆதாரங்களுடன் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் சிவாஜியை இந்து அரசர் என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை, பழமைவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நூலின் வரலாற்று ஆதாரங்களுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாதவர்கள், நூல் ஆசிரியர் கோவிந்த பன்சாரேக்கு பல மிரட்டல்களை விடுவித்து, இறுதியில் கொன்றுவிட்டனர். -ப.பா. ரமணி. எழுத்தாளர். நன்றி: தினமலர், 27/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *