வியப்பூட்டும் விடுகதைகள் 1000
வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ.
விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். விரித்த பாயை சுருட்ட முடியவில்லை. அது என்ன? விடை = கோலம். -வினோத். நன்றி: தினமலர்(திருச்சி), 9/4/2014.
—-
சூஃபி கதைகள், கீர்த்தி, நிவேதிதா பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 100ரூ.
இறை நம்பிக்கை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, எளிமையான வாழ்க்கை ஆகியவையே, சூஃபி மார்க்கத்தின் அடித்தளங்கள். சூஃபி ஞானிகள், தங்களது வாழ்க்கை மூலமே தத்துவ போதனை வழங்கிய மகான்கள். அவர்களின் அனுபவங்கள்தான், சூஃபி வழிகாட்டுதல் கதைகள் என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றன. இந்த நூலில், அருமையான அறிவுரைகள் கொண்ட 60 சூஃபி கதைகளை எளிமையான எழுத்துநடையில் தொகுத்தளித்திருக்கிறார் கீர்த்தி. நூலில் இடம் பெற்றுள்ள இதுதான் விதி என்ற கதையின் சுருக்கம் – ஒரு சூஃபி ஞானியிடம், விதியை ஏன் நம்புகிறீர்கள்? பகுத்தறிவால் விதியை மாற்ற முடியாதா? என்று வாதிட்டார் ஒருவர். அவரிடம் நீங்கள் உங்கள் வலது காலைத் தூக்குங்கள் என்றார் சூஃபி. அந்த நபர், தனது வலது காலைத் தூக்கி, இடதுகாலை ஊன்றி நின்றார். இதுதான் உங்கள் பகுத்தறிவு என்று கூறிய சூஃபி இப்போது, வலது காலைத் தரையில் வைக்காமல், இடது காலைத் தூக்குங்கள் என்றார். திகைத்த அந்த நபர், அது எப்படி முடியும்? என்று கேள்வி எழுப்பினார். சிரித்த சூஃபி, இதுதான் விதி என்றார். -துரை. நன்றி: தினமலர்(திருச்சி), 9/4/2014.