ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்
ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html
மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 10 காதைகளையும், பற்பல வரிகளையும் இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும் 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக்காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சிக்குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் பாத்திரங்களும் நீக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் முற்றிலும் சமணக் காப்பியம் என்று நிலைநாட்ட முற்பட்டுள்ளார். திருக்குறள் சிலப்பதிகாரமும் சமயம் கடந்த பெருமை, அறம் தழுவிய அனைத்து சமயக் கருத்துக்களையும் பொருத்தமாகச் சுட்டிச் சொல்லுகின்ற இலக்கியங்கள் என்பதே அறிஞர் கருத்து. இந்நூலாசிரியர் தம் கருத்துகளுக்கு ஆதாரமாக முன்னரே இந்நூல் கருத்தக்களைச் சொன்ன சிலரைக் காட்டியிருப்பினும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு (?) இயக்கச் சார்பு, நூலில் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிலவிய சமுதாயச் சூழல், சமய நிலைகள், காவியத்தின் மொழி நடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இடைச்செருகல் இருப்பதற்கு இடமில்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுவர். ஆய்வு என்னும் வகையில் இந்நூல் பலருக்கும் பயன்படும் என்பதும், பலரும் படித்து உண்மையை ஆராய வேண்டும் என்பதும் நம் கருத்து. -கவிக்கோ ஞானச்செல்வன் நன்றி: தினமலர் 26/7/13.
—-
புலியாட்டம், ந. வேலுசாமி, காவ்யா. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-367-0.html
ஆட்டக்கலைகளில், முதன்மையாளராக நாட்டுப்புறக் கலை விளங்குகிறது. அதில் உள்ள பாமர ரஞ்சகமானது, அறிவு ஜீவிகளையும் ஈர்க்க வல்லது. தமிழக நாட்டுப்புற ஆட்டக் கலைகளில், சர்வ சாதாரணமாக, மக்களால் உச்சரிக்கப்படும், ஆட்டமாக புலியாட்டம் உள்ளது. நாட்டுப்புறக் கலைகளின் பெரும்பாலான கூறுகளில், புலியாட்டம் ஊடோடியிருப்பதை பார்க்கலாம். சாதி, சமய, இன, மொழி, எல்லை ஆகியன கடந்து ஆடப்படும் ஆட்டம் இது. இது மனிதனின் ஆட்டத்தைப் பார்த்து மனிதன் ஆடுவதல்ல. புலியின் இயல்பை மனிதன் கற்று ஆடும் ஆட்டம். மனித மிருகமல்ல. மிருக மனிதரை கூடு விட்டு பாய்ந்து ஆடும் ஆட்டம். புலியாட்டம் குறித்த நுணுக்கமான பல தகவல்களை அழகாகவும், ஆழமாகவும் விவரித்த விதத்தில், நூல் நம் கவனத்தை கவர்கிறது. மொத்தம் 174 பக்கங்களில் நூல் வெளிவந்திருக்கிறது. கன்னிமாரா நூலகத்தில் படிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 24/11/13.