இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்
இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ
200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய நூல்தான் இது. துபுவா எழுதினாலும் அது பல காலம் வெளியிடப்படாமல் இருந்தது. வில்லியம் பெண்டிங் பிரபு, இதனுடைய கைப்பிரதியை வாங்கி கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். ‘இந்தியாவுக்குள் இருந்தாலும் வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், வீட்டுக்குள்தான் நாம் இருக்கிறோம். நமக்கு இப்படி ஒரு புத்தகம் தேவை’ என்று குறிப்பும் எழுதினார் பெண்டிங் பிரபு. அதன்பிறகுதான் அது அச்சுக்கு வந்தது. இந்த நூலைச் சரிபார்த்துப் பதிப்பித்தார் ஜி.யு.போப். புரிந்துகொள்ள அவசியமான ஏராளமான குறிப்புகளை போப் அதில் எழுதினார். இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழில் வந்துள்ளது துபுவாவின் எழுத்துக்கள். ‘புதியனவற்றைப் பின்பற்றுவது என்பதை ஓர் இந்து கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டான். ஒவ்வொரு வழக்கமும் வளைந்து கொடுக்காமல் முக்கியமானதாகக் கருதப்பட்டுப் பின்பற்றப்படுகிறது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு அழுத்தமாகக் கூறப்பட்டு உள்ளது. எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றும் இந்தியாவைப்போல் வேறு எந்த நாடும் இருக்க முடியாது’ என்ற பீடிகையுடன் தொடங்கும் துபுவா, இங்குள்ள சாதி அமைப்புகள், இடங்கை – வலங்கை பிரிவுகள், பிராமணர்களின் பழக்க வழக்கங்கள், வைணவ மற்றும் சமய நெறிமுறைகள், புரோகிதர்கள், சடங்குகள், மந்திரங்கள் என அனைத்தையும் வரிசைப்படுத்தி அடுக்குகிறார். பிராமணர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் சடங்குகளையும் தத்ரூபமாக வர்ணிக்கிறார். ‘பொதுவாக இந்துக்கள், சாந்த குணம் படைத்தவர்களே. ஆனால், தங்கள் உரிமைகளுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக தங்கள் உயிரையும்விடத் தயாராகின்றனர்’ என்கிறார் துபுவா. இந்திய மக்களின் பழக்கங்களைக் கிண்டல் அடிக்கும் துபுவா, சாதிப் பிரிவுகளை வரவேற்கும் மனிதராக இருப்பது ஆச்சர்யம். இந்தியா கட்டுப்பாடாக இருப்பதற்கு சாதிக் கட்டுமானம்தான் காரணம் என்றும் ஐரோப்பிய நாடுகள் தறிகெட்டுத் திரிவதற்கு இந்தக் கட்டமைப்பு இல்லாததுதான் காரணம் என்றும் இவர் சொல்வதை ஜி.பு.போப் தனது குறிப்புகளில் கண்டித்து எழுதுகிறார். துபுவாவை விட கூடுதலாக தென்னிந்தியாவில் இருந்தவர் போப். ‘சாதிதான் பல மோசமான விளைவுகளுக்குக் காரணம்’ என்கிறது போப் குறிப்பு. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் நம்மோடு இன்னமும் தொட்டுத் தொடரும் பழக்க வழக்கங்கள் எவை, காலப்போக்கில் எதை எல்லாம் கை கழுவிவிட்டு நகர்ந்து வந்துள்ளோம் என்பதைப் படித்துப் பார்க்க துபுவாவின் இந்தப் புத்தகம் பயன்படும். அன்று, ஐரோப்பியர்கள் படிப்பதற்காக எழுதினார். இன்றைய நம்மை, நாமே தெரிந்து கொள்ள ஒரு பிரெஞ்சுக்காரரின் புத்தகம்தான் உதவிக்கு வருகிறது! — புத்தகன் (நன்றி: ஜுனியர் விகடன், 08-08-12)