இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ.

இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் பேசியிருப்பது இசைஞானிக்கே உரிய துணிச்சல். இதுவரை இசைஞானியைப் பற்றிய கற்பனையை மறைந்து போகவைக்கும் அனுபவ வெளிப்பாடுகள் அவை. இவர்தான் இசைஞானியா? என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் உண்மைகள் அவை. இசையைப் போலவே அவரது பதில்களும் படிப்போரை ஆக்கிரமித்துக் கொள்ள இதைவிட வேறு என்ன வேண்டும். ரசிகர்கள் கேட்டது கேள்வி மட்டும்தான். இசைஞானி தந்ததோ ஒரு நீண்ட இசை வரலாற்றுப் பதிவு. படங்கள், பாடல்கள், பாடலாசிரியர்கள், தனக்கு முன்னும் பின்னுமான இசையமைப்பாளர்கள், சமகாலக் கலைஞர்கள், தோல்வியை வெற்றியாக்கிய நிகழ்வுகள், புதியோருக்கான வழிகாட்டல்கள், ஆன்மீகப் பெரியவர்கள் என்று ஒவ்வொரு பதிலிலும் அவர் பதிவு செய்திருக்கும் கருத்துக்களைத் தொகுத்தால் இசை இமயத்தின் வரலாற்றுப் பெட்டகமாக இந்நூல் காட்சியளிக்கும். நன்றி: குமுதம், 2/7/2014.  

—-

நீங்களும் முதலாளி ஆகலாம், கீதா பிரேம்குமார், ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ.

சுமார் 25 வருடங்களாக, மின்னணுத் துறையில் வெற்றிகரமான சிறு தொழில் அதிபராகத் திகழ்ந்து வரும் இந்நூலாசிரியை, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறு தொழில் பற்றி பல பயிலரங்க வகுப்புகள் எடுத்துவருகிறார். இளைஞர்களிடத்தில் சிறு தொழில் மற்றும் சுயதொழில் குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்நூலை வடிவமைத்துள்ளார். கையில் போதிய முதலீடும், வியாபாரப் பின்புலமும் இன்றி, இத்துறையில் தன்னால் இவ்வளவு பெரிய உயரத்தை எப்படி அடைய முடிந்தது என்பதை, தனது அனுபவத்தைக்கொண்டே இந்நூலில் விளக்கியுள்ளது சிறு தொழில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. தொழில் தொடங்கப் பணம் இல்லையே என்ற கவலையே தேவையில்லை. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், நம்பகத் தன்மையும், சலியாத உழைப்பும்தான் தேவை என்பதை வலியுறுத்தும் ஆசிரியை, இவற்றால் ஏற்படும் பலன்களை பலரது அனுபவங்களைக் கொண்டும் கூறியுள்ளது தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இத்துறையில் காபி வியாபாரம் முதல் எலெக்ட்ரானிக் வரை பல வியாபாரங்களிலும் என்னென்ன வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன? ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ்வது எப்படி? கிடைத்த செல்வத்தைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி? இப்படி நம் மனதில் தோன்றும் பல வினாக்களுக்கு இந்நூலில் எளிய விளக்கங்களைப் பெறலாம். -பரக்கத். நன்றி: துக்ளக், 2/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *