உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், அஜன் பிராம், பக். 304, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 150

இந்நூலின் ஆசிரியர் தனது பிரசங்கத்தின்போது கூறிய கதைகளின் தொகுப்புதான் இந்நூல். ஒவ்வொரு கதையும் நமது நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. இதனால் உயிரையே காக்கும் அறிவுத் திறம் உனக்கு ஏற்படும் என்று ஆதாரத்துடன் ஒரு கதையில் விளக்குகிறார் அஜன் பிராம். நமது இளமைக் காலத்திலேயே அதிகம் பேசாமல் இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்வது நல்லது. பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சங்கடங்களை இதன் மூலம் தவிர்த்துவிடலாம். யாராவது உங்களை நாய் என்று திட்டினால் கோபப்பட வேண்டாம். குனிந்து கீழே பாருங்கள். உங்களுக்கு வால் இல்லாமல் இருப்பதைக் காண்பீர்கள். எனவே நீங்கள் நாயல்ல. பிரச்னை அதோடு முடிந்துவிட்டது. ஒரு காரியம் கடினமாக இருக்கிறதா? அது கடினம் என்று நினைப்பதால்தான் அந்தக் காரியம் கடினமானதாகத் தோன்றுகிறது. இவை போன்ற நன்முத்துக்கள் இந்நூலில் சிதறிக் கிடக்கின்றன. இந்நூலைப் படிப்பதன்மூலம் இதனை சேகரித்து வைத்துக்கொண்டு பயனுறலாம்.  

 

மாநகர் மதுரை – அன்றும் இன்றும், குன்றில் குமார், பக். 328, சங்கர் பதிப்பகம், சென்னை – 49. விலை ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-482-6.html

மதுரை மாநகர் மிகவும் புராதனப் பழமையானது. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் தல வரலாறு, விழாக்கள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை விளக்கப்பட்ட அளவுக்கு, நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய இடங்களின் விவரங்களும், அவை தற்போது எப்படியிருக்கின்றன என்பதும் விளக்கப்படவில்லை. குறிப்பாக, மதுரையின் முக்கிய பகுதிகளின் பெயர், அதற்கான காரணம், அவை தற்போது மாறியிருக்கும் விதம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தால் அவை புதிய தகவல்களாக இருந்திருக்கும். குறிப்பாக, புது மண்டபத்தின் முன்பு அமைந்த பிரமாண்ட நந்தி சிலை, திலகர் திடல் பகுதியில் அமைந்த பாலம், திருமலை நாயக்கர் மகாலில் உள்ள கல்வெட்டு காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை சந்தைப் பகுதி போன்ற பல முக்கிய தகவல்கள் இதில் விடுபட்டுள்ளன. மதுரையின் பழமை அம்சங்கள் மாறி, புதுமையாகக் காட்சி தரும் ரயில் நிலையம், விமான நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் என சில தகவல்கள் புதுமையாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏற்கெனவே மதுரையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு, இவ்வளவுதானா? என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நன்றி: தினமணி 17-12-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *