நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை)
நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை), ஏ.எம். சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100
ஆதாயம் தேடுவோரும் ஆள்காட்டிகளும் அதிகார வர்க்கத்தில் அதிகமாகிப்போன இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். என்ற உயரிய பொறுப்பை தனக்கான கௌரவமாகக் கருதாமல், மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.எம். சுவாமிநாதன். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சொல்லாமல், ஐ.ஏ.எஸ். அலுவலர் என்றவர். இத்தகைய அலுவலர்கள் காலப்போக்கில் குறைந்துபோன வருத்தம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னும் அதிகமாகிறது! ஏ.எம். சுவாமிநாதன் தன்னுடைய தொடக்கக் காலத்து நிகழ்வு ஒன்றைச் சொல்கிறார்… தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சார்பில் புதிய ஆலைகள் நிறுவும் முயற்சி 1964 ஆம் ஆண்டு நடந்துள்ளது. அப்போதைய இயக்குனராக இருந்த ஐராவதம் மகாதேவன், இயந்திரங்கள் வாங்குவதற்காக ஜப்பான் செல்கிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு விடுதிக்கு வருகிறார். அப்போது அந்த நிறுவனத்தின் ஆட்கள் வந்து, ‘உங்களுக்கான 12 சதவிகித கமிஷனை எப்படித் தரவேண்டும்?’ என்று கேட்கிறார்கள். அதைக்கேட்டு மகாதேவன் அதிர்ச்சி அடைகிறார். ‘அந்தக் கமிஷன் தொகையை கணக்கில் கொண்டுவந்து, இயந்திரத்தின் விலையைக் குறையுங்கள், அது அரசாங்கத்தின் சேமிப்பாக மாறட்டும்’ என்கிறார். அதை அவர்கள் ஏற்கவில்லை. முழு ஒப்பந்தத்தையும் இவர் ரத்து செய்வதாகச் சொல்ல… அவர்களுக்கு வேறுவழி இல்லை. ஆறு இயந்திரங்களுக்கான விலைக்கு ஏழு இயந்திரங்களைக் கொடுக்கிறார்கள். ‘இவ்வளவு நாணயமான அலுவலரிடம் வேலை செய்வது எங்களுக்குப் பெருமையாக இருந்தது’ என்று எழுதுகிறார் ஏ.எம். சுவாமிநாதன். இத்தகைய நல்வழிகாட்டிகள் அன்று இருந்ததால்தான், சுவாமிநாதன் போன்றவர்கள் வளரவும் பணியில் இருக்கவும் முடிந்தது. தரமான பஞ்சு வாங்குவதற்காக இவர் அதிகமாகப் பேரம் பேசி இருக்கிறார். ‘ஏன் சார்… ஏதோ உங்க சொந்த மில்லுக்குப் பேரம் பேசுவதுபோல, 10 ரூபாய்க்கு இவ்வளவு வாதாடுகிறீர்களே?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆமாம், இது அரசாங்க மில் அல்ல. என்னுடைய சொந்த மில்தான்’ என்று சொன்னதுடன், தன்னுடைய பணிக்காலத்தில் குறிப்பிட்ட வியாபாரியிடம் பஞ்சு வாங்குவதையே நிறுத்தச் சொல்லி இருக்கிறார் சுவாமிநாதன். ‘கலெக்டர் பதவிக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கௌரவம், 1974 ஆம் ஆண்டில் நான் கலெக்டராக இருந்தபோதே குறைந்திருந்தது. இன்று இன்னும் குறைவு’ என்று நொந்துபோய் சுவாமிநாதன் சொன்னாலும், பெரும்பாலான அரசு அலுவலர்கள் நாணயமாகவும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவதைச் சுட்டிக் காட்டுகிறார். நிறைய ஆசை காட்டுதல், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு இடையே, அரசு அலுவலர்கள் வேலை பார்க்கவேண்டி இருக்கும் சூழ்நிலையை ஒப்புக்கொள்கிறார். காமராஜ் காலம் முதல் ஜெயலலிதா ஆட்சி வரையிலான நிர்வாகப் போக்குகளை ஒரு நேர்மையான கண்ணாடி மூலமாகப் பார்க்கும் வாய்ப்பை இந்தப் புத்தகம் வழங்குகிறது! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 23.12.12