ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்
ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40 பி, இரண்டாவது தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 61. விலை ரூ. 200
அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் ஆட்சியாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் சொல்லக்கூடிய வழக்காக ராஜீவ் கொலைச் சதி அமைந்திருப்பதாகவே முடிவுக்கு வரத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்! ராஜீவ் கொலை சம்பந்தமாக இரண்டு முக்கியமான புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. ஒன்று, அதன் விசாரணையைத் தலைமையேற்று நடத்திய வி.ஆர். கார்த்திகேயன் எழுதியது. இன்னொன்று, அவருக்குக் கீழே பணியாற்றிய ரகோத்தமன் எழுதியது. விசாரணை மற்றும் தீர்ப்பை அடிப்படையாக வைத்து கார்த்திகேயன் எழுதினார். சி.பி.ஐ. சில விஷயங்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டது என்பதை ரகோத்தமன் சுட்டிக் காட்டினார். வேலுசாமியின் இந்தப் புத்தகம், விசாரணையின் அடித்தளத்தையே தகர்க்கிறது. ‘எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்பது கிராமத்துப் பழமொழி. எய்தது யார் என்பதே வேலுசாமி திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி! சம்பவம் நடந்த காலத்தில் சுப்ரமணியன் சுவாமியுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் வேலுசாமி, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விவரிக்கிறார். அன்றைய தினம் சென்னையிலும் இல்லாமல் டெல்லியிலும் இல்லாமல் சுவாமி தன்னுடைய இருப்பை மறைத்துக்கொண்டதும், ஜெயின் கமிஷனில் பதில் அளிக்க முடியாமல் திணறியதும் சுப்ரமணியன் சுவாமிக்காக வாழப்பாடி ராமமூர்த்தி பேசியதும், காஞ்சிபுரத்தில் நடந்த திடீர் யாகமும், சுவாமியுடன் இலங்கைப் பெண் ப்ரியதர்ஷினி மற்றும் சீறிசபாரத்தினத்தின் சகோதரர் ஸ்ரீகாந்தா ஆகியோர் தொடர்பில் இருந்ததும்… என்று தன் கண்ணால் பார்த்த, நேரடியாய் அறிந்த செய்திகளின் பின்னணியை வைத்து சி.பி.ஐ. கண்டுகொள்ளாத பக்கங்களை வேலுசாமி அடுக்குகிறார். இவர் சொல்லும் தகவல்களை சி.பி.ஐ. கண்டுகொள்ளவே இல்லை. ஜெயின் கமிஷன் உதாசீனப்படுத்துகிறது. வேலுசாமியை தனது வீட்டுக்கே வரவழைத்துப் பேசிய சோனியாவும் மௌனம் ஆனது ஏன் என்று தெரியவில்லை. ‘கொலைகாரர்கள் சுதந்திரமாகத் திரிவதற்கும் அப்பாவிகள் சிறையில் 21 ஆண்டுகளாக வாடுவதற்கும் இந்தப் புலனாய்வுப் போக்குதான் காரணம். அவர்களின் கைகளைக் கட்டி, வேண்டுமென்றே விசாரணையைத் திசை திருப்ப அல்லது முடக்கி வைக்க இருந்தார்களோ என்ற சந்தேகத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்று, தன்னடக்கத்தோடு வேலுசாமி கூறி இருந்தாலும், அவர் சொல்லும் நிகழ்வுகள் இந்தியாவின் அஸ்திவாரத்தை அசைக்கும் பன்னாட்டுச் சதி வலையின் பின்னணி கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய உளவுத் துறையும் உள்துறையும் படிக்கவேண்டிய ஏராளமான பாடங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. தூக்குக் கயிற்றில் நிஜம் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கருணை மனு போட்டுக் காத்திருக்கிறார் வேலுசாமி! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 26-12-12